சென்னை,

ந்திர கடல் பகுதியில் மீன் பிடித்ததாக,  சென்னை பகுதியை சேர்ந்த 180 மீனவர்களை ஆந்திரா சிறைபிடித்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை காசிமேட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஆந்திரகடல் பகுதியான மண்ணூர் பூண்டி அருகே சென்னையை சேர்ந்த மீனவர்கள்  மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, விசைப்படகுகளில் வந்த ஆந்திர மீனவர்கள், மீன் பிடித்துக்கொண்டிருந்த 140 தமிழக மீனவர்களையும், 13 படகுகளையும்  திடீரென சுற்றி வளைத்து சிறை பிடித்தனர்.

மேலும், பென்னார்பாளையம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த காசிமேடு மீனவர்கள் 40 பேரையும் 4 விசைப் படகுடன் ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர்.

மொத்தம் 180 மீனவர்கள் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். இது பற்றிய தகவல் காசிமேடு பகுதிக்கு தெரிந்ததும்  பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை மீனவர்களை மீட்பதற்கான  முயற்சியில் மீனவர் சங்க பிரதி நிதிகள் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 2 வாரத்துக்கு முன்பு ஆந்திரா பகுதியில் மீன்பிடித்த காசிமேடு மீனவர்கள் 300 பேர் 31 விசைப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டனர். அப்போது மீனவர் சங்க பிரதிநிதிகள் ஆந்திர மீனவர்களு டன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை மீட்டு வந்தனர் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஆந்திர மீனவர்களால் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்களை விடுவிக்க லட்சக்கணக்கில் ஆந்திர மீனவர்கள் பேரம் பேசி பணம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆந்திர அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன் வருவதில்லை என்றும், “உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

கடலில் மீன்பிடிக்கும்போது இலங்கைகாரன்தான் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி சிறை பிடிக்கிறான் என்றால், தற்போது அண்டை மாநில மீனவர்களே, பணத்துக்கு ஆசைப்பட்டு இதுபோன்று சிறை பிடித்து வருவது அதிகரித்துள்ளதாக மீனவ மக்கள் கூறுகின்றனர்.