தகுதி நீக்கம் வழக்கு: 9ந்தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதி மன்றம்!

சென்னை,

ரபரப்பாக நடைபெற்ற 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கு வரும் 9ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது.

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை சபாநாயகர்  தகுதி நீக்கம் செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வரும் 9ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டிடிவி தினகரன் தரப்பு சார்பாக அபிசேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த விசாரணை இன்று காலை 11.35 மணி முதல் 1.30 மணி நடைபெற்றது. பின்னர்  மதிய இடைவேளைக்கு பிறகும் விசாரணை 2.20 மணிக்கு தொடங்கி 3.35 மணி வரை நடைபெற்றது.

விசாரணையின்போது  சபாநாயகர் உத்தரவு தவறானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது, அதிக முரண்பாடுகள் நிறைந்தது  என்று தினகரன் தரப்பு நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை வரும் 9ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி கூறினார்.

அதுவரை ஏற்கனவே தனி நீதிபதி விதித்த தடை உத்தரவு  தொடரும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடையும் தொடரும் என்றும் கூறினார்.

வரும் 9ந்தேதி வரை விசாரணையின் போது யாரும் அவகாசம் கேட்கக்கூடாது என்றும் நீதிபதி கூறினார்.

இதன் காரணமாக அன்றே இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
18 MLA's disqualified case: Adjourned to 9th october, Chennai High Court