விரைவில் நல்ல செய்தி! காங்கிரஸ் கே.ஆர்.ராமசாமி

சென்னை,

மிழகத்தில் விரைவில் ஆட்சி கலைப்பு என்ற நல்ல செய்தி வரும் என்று தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறினார்.

காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவருமான கே.ஆர்.இராமசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது “தமிழக மக்களுக்கு ஆட்சி கலைப்பு என்ற நல்ல செய்தி விரைவில் வரும்’ என  தெரிவித்தார்.

காரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில்  டெங்கு காய்ச்சலால் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால்,  தமிழக அரசின் சுகாதாரத்துறை, டெங்கு காய்ச்சல் இல்லை என மூடி மறைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், மைனாரிட்டி பலத்தை கொண்டு ஆட்சி செய்யும் தமிழக அரசு  முழுமையாக செயல்பட முடியவில்லை. மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தி உள்ள  ஜி.எஸ்.டி வரியால் தமிழகம் முழுவதும் அரசின் நலத்திட்ட பணிகள் முடங்கி போயுள்ளது, விரைவில் ஆட்சி கலைப்பு என்ற நல்ல செய்தி வரும்  என்று கூறினார்.

தமிழக அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு ஒரு சில உயர் அதிகாரிகள் துணை போவதாகவும், அரசின் தவறுக்கு துணை போகும் அதிகாரிகள் கூடிய விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.