காங்டாக்

சிக்கிம் மாநில வெள்ளத்தில் 18 பேர் உயிரிழந்து 98 பேர் காணாமல்  போய் உள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள லாச்சன் பள்ளத்தாக்கில் மேகவெடிப்பு ஏற்பட்டு லோனாக் ஏரி அமைந்துள்ள பகுதியில் குறுகிய நேரத்தில் அதீத கனமழை கொட்டித்தீர்த்தது.  இதனால் அங்குள்ள டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அந்த ஆற்றின் இருபுறமும் உள்ள கரைகளை உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்த பெரு வெள்ளம் கிராமங்கள் மற்றும் நகரங்களை மூழ்கடித்து சுங்தாங் அணையை சென்றடைந்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

அணையின் கீழ் உள்ள பகுதிகளில் இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளத்தில் 22 ராணுவ வீரர்கள் உள்பட ஏராளமானோர் அடித்து செல்லப்பட்டனர். வெள்ளப்பெருக்கால் பாக்யாங், காங்டாக், நாம்சி, மங்கன் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் மங்கன் மாவட்டத்தின் சுங்தாங் நகரம் மிகவும் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அந்நகரின் 80% பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மங்கன், காங்டாக் மற்றும் நாம்சி ஆகிய மாவட்டங்களில் 11 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள், குடிநீர் குழாய்கள், கழிவுநீர் பாதைகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் முழுமையாக சேதமடைந்தன.

இதுவரை சிக்கிமில் மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்து 26 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 22 ராணுவ வீரர்கள் உள்பட 98 பேரின் கதி என்ன? என்பது இன்னும் தெரியவில்லை.

ஆகவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் மாயமானவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த மழை, வெள்ளத்தால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.