லக்னோ,

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய உ.பி. பிஆர்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில், தற்போது மீண்டும் குழந்தைகளின் இறப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 16 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம்  உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி அரசு மருத்துவ மனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16 குழந்தைகள் மீண்டும் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 24 குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவர்களில் 16 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மரணம் அடைந்த குழந்தைகளில் 6 குழந்தைகள் வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் மூளை அழற்சி நோய் காரணமாக இறந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களில்  2 பேர் குஷின் நகர்  பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், 4 பேர் கோரக்பூர் மற்றும், 4 பேர் மகாராஜகன்ஜ், ஒருவர் பாஸ்தி பகுதியை சேர்ந்தவர், மற்றொருவர் பல்ராம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிஆர்டி மருத்துவமனை மருத்துவர்கள், ஏற்கனவே மூளை அழற்சி நோயின் காரணமாக 36 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 5 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறி உள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 1470 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 310 பேர் மரணமடைந்ததாகவும் கூறி உள்ளனர்.