சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள ரேசன் கடைகளில் ரூ.2ஆயிரம் நிவாரணத்தொகையுடன்,  14பொருட்கள் கொண்ட மளிகை தொகுப்பு வரும் 15ந்தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதறக்கான டோக்கன் நாளை முதல்  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 7-ந் தேதி பொறுப்பேற்றதும், முதன்முதலாக கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த நிவாரண உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனப்டி ஏற்கனவே முதல்கட்டமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது. அடுத்தக்கட்ட நிவாரணம் ஜூன்  15ந்தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், ஏற்கனவே அறிவித்தபடி,  14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு விநியோகமும் 15ந்தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான தொடக்க நிகழ்ச்சி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3-ந் தேதி அன்று நடைபெற்றது. தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில்,  ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகையுடன்  ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அதற்கான பணிகள் முடிவடைந்துள்ளதால், நாளை  (11-ந் தேதி) முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. வரும்  14-ந் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து, டோக்கனில் குறிப்பிட்ட நாளில் கார்டுதாரர்கள் ரேசன் கடைக்கு சென்று நிவாரண பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த நிவாரணத்தை  அரிசி கார்டு வைத்துள்ள 2.11 கோடி குடும்பத்தினர்‘ பயன் அடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு இலவசமாக வழங்கும் 14 வகை மளிகை தொகுப்பில் இருப்பது என்ன?

கோதுமை மாவு-1 கிலோ, உப்பு -1 கிலோ, சர்க்கரை-500 கிராம், உளுத்தம்பருப்பு- 500 கிராம், புளி-250 கிராம், கடலை பருப்பு-250 கிராம், கடுகு-100 கிராம், சீரகம்-100 கிராம், மஞ்சள் தூள்-100 கிராம், மிளகாய் தூள்-100 கிராம், டீத்தூள் -100 (2 பாக்கெட்டுகள்), குளியல் சோப்-1 (125 கிராம்), சலவை சோப்-1 (250 கிராம்) ஆகிய 14 பொருட்கள் சிறப்பு தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.