புனே: 12 வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், ஆசிய மகளிர் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி விலகுவதாக அறிவித்து உள்ளது.

20-வது ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் மும்பை, நவி மும்பை, புனே மைதானங்களில் நடைபெற்று வருகிறது.  அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்தில் நடைபெறவுள்ள FIFA மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கான தகுதி ஆட்டமாக இது நடைபெறுகிறது.

இந்த போட்டியில் இந்தியா, சீனா, சீனதாய்பே, ஈரான் ஆகிய நாடுகள் குரூப்-ஏ பிரிவிலும், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் குரூப்-பி பிரிவிலும்,  ஜப்பான், கொரியா, வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகள் குரூப்-சி பிரிவிலும் பங்கேற்கின்றன.

இந்த நிலையில், இந்திய வீராங்கனைகள் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து 2-வது லீக் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடரில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் 13 வீராங்கனைகள் இல்லாததை அடுத்து ஆசிய கோப்பையில் இருந்து இந்திய மகளிர் அணி விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணியினரின் கனவு காணல்நீரானது.