சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் திறக்க இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள்  குறித்து மாணாக்கர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.  இது தொடர்பாக டிசம்பருக்குள் அறிவிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்காமல், ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. கடந்த கல்வியாண்டில்,  கொரோனா  பாதிப்பு காரணமாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.  ஆனால்,  இந்த ஆண்டு இதுவரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில்,  முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டது. ஆனால், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவும் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகள் மூலம் குறைந்த அளவிலேயே பாடம் நடத்தப்படுவதாலும், மாணவர்கள் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியாத சூழலில், பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக,  இந்த முறையும் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டில் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.