டெல்லி: 100கோடி தடுப்பூசி சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது என்று மக்களிடையே உரையாற்றிய  பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

  • இந்த சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது
  • 100 கோடி கொரோனா தடுப்பூசி சாதனை புதிய இந்தியாவின் பிரதிபலிப்பு
  • நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்
  •  உலக அளவில் மருந்து தயாரிப்பில் இந்தியாவுக்கு சிறப்பு இடம் 

கொரோனா எனும் பெருந்தொற்றை தடுக்க இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் 2021 ஜனவரி மாதம் தொடங்கியது. சுமார் 9 மாதங்களில் 100 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் சாதனையை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன

இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டதை கொண்டாடும் வகையில்,  100 பாரம்பரிய சின்னங்களை தேசியக்கொடியின் மூவர்ண வண்ணத்தில் ஒளிரச் செய்ய இந்திய தொல்லியல் துறை அசத்தி உள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றிய சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், பெருந்தொற்றுக்கு எதிராக துணிந்துப் போராடிய நாட்டு மக்கள் ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பாரம்பரிய நினைவு சின்னங்களை மூவர்ணத்தில் ஒளிர செய்து வருகிறது. மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.  மேலும் சுகாதார மையங்கள் மீது மழை போல மலர்தூவவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது,

2021, ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான வலுவான தடுப்பூசிப் போர், நேற்று (அக்.22 ஆம் தேதி) 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. அக்டோபர் 21ஆம் தேதியன்று, 1 பில்லியன் கரோனா தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா அடைந்தது.

257 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி கடினமான இலக்கை இந்தியா எட்டியுள்ளது. 100 கோடி டோஸ் செலுத்தியது புதிய சாதனையின் தொடக்கமாகும்.  மக்களின் ஒத்துழைப்பு தான் இந்த சாதனை செய்ய காரணமானது.

இந்த சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது. இந்த சாதனைக்காக ஒவ்வொரு குடிமகனையும் வாழ்த்துகிறேன்.

100 கோடி தடுப்பூசிகள் வெறும் எண் அல்ல, நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்.

இந்தியா ஒரு கடினமான இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும் என்பதற்கான சான்று. நாடு தனது இலக்குகளை நிறைவேற்ற கடினமாக உழைக்கிறது என்பதை இது காட்டுகிறது.

நம்முடைய தடுப்பூசி திட்டம் குறித்து பலர் சந்தேகம் எழுப்பினர். இந்தியாவில் இது எப்படி நல்ல ஒழுங்குமுறையுடன் சாத்தியப்படுத்த முடியும் என கேட்டனர். ஆனால், அவர்களின் சந்தேகங்கள் தகர்க்கப்பட்டுள்ளது.

100 கோடி கரோனா தடுப்பூசி சாதனை புதிய இந்தியாவின் பிரதிபலிப்பு. புதிய இந்தியாவின் விடா முயற்சி, நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி இது.

நமது தடுப்பூசி திட்டத்தில் விஐபி கலாசாரம் தலையிடாது என்பதை உறுதி செய்துள்ளோம். அனைவரும் சமமாக நடத்தப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசியல் வழங்கியுள்ளோம். கடைக்கோடி மக்களுக்கும் கூட கரோனா தடுப்பூசியை நாம் கொண்டு சேர்த்துள்ளோம். இதற்காக நாம் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்

இந்தியாவின் முழு தடுப்பூசி திட்டமும் அறிவியல் சார்ந்தது. அறிவியல் அடிப்படையிலானது என்ற உண்மையைப் அறிந்து நாம் பெருமைப்பட வேண்டும். இது முற்றிலும் அறிவியல் முறைகளை அடிப்படையாகக் கொண்டது.

இன்று இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் உலகளவில் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. நாட்டு மக்களின் ஒத்துழைப்பால் தான் 100 கோடி தடுப்பூசி மைல்கல் சாதனை சாத்தியமாகியுள்ளது.

இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் முற்றிலுமாக அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவின் இணையதளம் மக்களிடம் தடுப்பூசித் திட்டத்தைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றை வெற்றிகரமாக சமாளித்த நம்மால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள முடியும்.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள வல்லுநர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி நேர்மறையாக தெரிவித்துள்ளனர்.

இன்று, இந்திய நிறுவனங்களுக்கு பெரிய அளவில் முதலீடு வருவது மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன.

நாம் எங்கு பார்த்தாலும் இப்போது நம்பிக்கை மட்டுமே உள்ளது. முன்பு இந்த நாட்டில், முழக்கங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று அனைவரும் ‘மேட் இன் இந்தியா’ பற்றி பேசுகிறார்கள்”.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

100கோடி தடுப்பூசி போடப்பட்டது குறித்து பிரதமர் மோடி எழுதியுள்ள கட்டுரையில், இந்திய தடுப்பூசி திட்டத்தை அச்சத்தில் தொடங்கி தன்னம்பிக்கையில் முடிந்த பயணம் என குறிப்பிட்டுள்ளார். இப்பயணத்தின் காரணமாக, நாடு வலுப்பெற்றுள்ளது என்றும் அச்சம் அவநம்பிக்கைக்கு மத்தியில் திட்டம் வெற்றிபெற்றதற்கு மக்கள் அதில் வைத்த நம்பிக்கையே காரணம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

சீனாவை தொடர்ந்து இரண்டாவது நாடாக நூறு கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.