டில்லி,
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பால், ஏழை எளிய மக்கள் கடும் துன்பத்தில் தள்ளப்பட்டுள்ளதாக, தொழிலதிபர் ரத்தன் டாடா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 8ந்தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் பணத்தை மாற்றவும், அன்றாட தேவைகளுக்கு பணத்தை வங்கியில் இருந்து எடுக்கவும் படாத பாடு பட்டு வருகின்றனர்.
ஆனால், மோடியோ, இந்த அறிவிப்பினால் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்கள் ஒழியும் என்றும் தெரிவித்து வருகிறார்.
ஆரம்பத்தில் இதை வரவேற்ற பலர் தற்போது, 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் புதிய பணம் புழக்கத்திற்கு வராததால் மத்தியஅரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.
tata
அதுபோல பிரபல வர்த்தக ஜாம்பவன் ரத்தன் டாடாவும்,   மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ரூபாய் நோட்டுகள் சீர்திருத்தம் நாட்டுக்கு நன்மை பயக்கும் என  சில நாட்கள் முன்பு வரவேற்றுப் பேசியிருந்தார்.
ஆனால், தற்போது பணத்துக்காக மக்கள் படும் இன்னல்களை புரிந்துகொண்ட ரத்தன் டாடா,  தற்போது மத்திய அரசின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்த உள்ளார். போதிய முன்னேற்பாடு இன்றி, திடீரென இத்தகைய அறிவிப்பை மேற்கொண்டது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,”ஏழை எளிய மக்களின் நலன் காக்க வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், நாட்டில் தற்போது பேரழிவு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு உடனடியாக, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்,’’ என்றும் ரத்தன் டாடா சுட்டிக்காட்டி உள்ளார்.