மும்பை

பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு ஏலம் அறிவித்த புல்லி பாய் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்த சில பெண்களின் புகைப்படங்களை அவர்களுக்குத் தெரியாமலே இணைய தளத்தில் இருந்து எடுத்து புல்லிபாய், சல்லி டீல்ஸ் போன்ற இணைய தளங்களில் வெளியிடப்பட்டன.  மேலும் அந்த செயலிகளில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் உள்ள பெண்களை டீல் ஆஃப் தி டே எனனும் தலைப்பில் ஏலம் விடுவது போல் பதியப்பட்டன.

சிவசேனா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, “நான் மும்பை காவல் ஆணையர், டிசிபி குற்றவியல் ராஷ்மி கரன்திகர் ஆகியோரிடம் குறிப்பிட்ட சமூக பெண்களை ஏலம் விடும் செயலிகள் குறித்துப் பேசினேன். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்கள். இவ்வாறு பாலியல் மற்றும் பெண் வெறுப்பு இணையத்தை நடத்துவோர் கைது செய்யப்பட வேண்டும். மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “கிட்ஹப் (மென்பொருள் மேம்பாடு மற்றும் பதிப்புக் கட்டுப்பாட்டிற்கான  இணைய ஹோஸ்டிங் வழங்குநர்) மூலம் இன்று சர்ச்சைக்குரிய செயலிகள் முடக்கம் செய்யப்பட்டன.  இதுகுறித்து காவல்துறை மற்றும் சிஇஆர்டி பிரிவு விசாரணை நடத்தி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள், “கடந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி கிட்ஹப் மூலம் அடையாளம் தெரியாத சிலரால் ‘சல்லிடீல்’ என்ற செயலிகள் உருவாக்கப்பட்டது. அவர்கள் அந்த செயலிகள் மூலம் பெண்களின் புகைப்பட ஸ்கிரீன்ஷாட்களைப் பகிர்ந்து கொண்டனர். இதில் இஸ்லாமிய சமூக பெண்களின் புகைப்படத்தை அதிகளவில் பயன்படுத்தி உள்ளனர்.

‘சல்லி’ என்பது பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இழிவான வார்த்தையாகும். இதில் தேர்வு செய்யப்பட்ட பெண்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து சில பெண்களின் புகைப்படங்களை ‘டீல் ஆஃப் தி டே’ என்ற பெயரில் ஏலம் விடுவார்கள்.   இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் இரண்டு எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளனர்.