கொல்கத்தா:
மிக்ரான் பரவல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பல்கலைகழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படவும் ஆணையிட்டுள்ளது.

உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் ஜிம்கள் & ஸ்பாக்கள் நாளை முதல் மூடப்படும் என்றும் மேற்கு வங்கத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

உணவகங்கள் & பார்களில் 50% மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதுபோன்று மால்கள், திரையரங்குகளில் இரவு 10 மணி வரை 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. புறநகர் ரயில்கள் நாளை முதல் இரவு 7 மணி வரை 50% பயணிகளுடன் மட்டும் இயக்கப்படும். திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் இல்லை என்றும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், மேற்குவங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்களுக்கு மட்டுமே விமான சேவை என்றும் ஜன.5 முதல் டெல்லி, மும்பையிலிருந்து வரும் விமானங்களுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மட்டுமே அனுமதி எனவும் தெரிவித்துள்ளது.