தூத்துக்குடி

நாளை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால்  தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாநகரங்கள் முழுவதும் இந்த கன மழையால் வெள்ளம்  கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான வண்ணாரப்பேட்டை பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்குத் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது.

இதைப் போல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இங் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் இங்கு மேலும் 2 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.