சேலம்

திமுக என்னும் முகமூடியை அணிந்து வந்து தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாஜக அழிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வரும் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  அவ்வகையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தமிழகம் வந்து பிரசாரம் செய்தார். நேற்று மாலை சேலம் சீலநாயக்கன்பட்டியில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, “தமிழகம் பல தேர்தல்களை சந்தித்துள்ளது. அனைத்து தேர்தல்களில் 2 கட்சிகளுக்கிடையே போட்டி இருக்கும். தற்போது தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தல் 2 கட்சிகளுக்கிடையேயான போர் அல்ல.   மாறாகத் தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு உள்ளிட்ட அனைத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலை எதிர்கொள்ளும் போராகும்.

தமிழகத்திற்குள் இந்தியாவும், இந்தியாவிற்குள் தமிழகமும் இருப்பதாகவே நான் கருதுகிறேன். எல்லா மொழியும், உணர்வும் சமநிலையில் இருக்க வேண்டும். இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களில் பலதரப்பட்ட மொழி, மதம், பண்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்துக் கொண்டதாகும். எந்த ஒரு மொழியோ, பண்பாடோ, சிந்தனையோ உயர்ந்தது கிடையாது.

தமிழ் மொழி, பண்பாடு மீது தொடுக்கப்படும் தாக்குதலை, இந்தியாவின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே பார்க்கிறேன். காரணம், தமிழ்நாட்டையோ, மேற்குவங்கத்தையோ மதிக்காத இந்தியா இருக்க முடியாது. தமிழ் சிந்தனையை மதிப்பது போல், மற்ற மொழி சிந்தனைகளையும் மதிக்கிறேன்.

இக்கூட்டத்தில் தி.க. தலைவர் வீரமணி பேசும்போது, முகக்கவசம் பற்றி பேசினார். முகக்கவசம் கொரோனாவை ஒழிக்க மிகவும் முக்கியம். அனைவரும் கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணிந்திட வேண்டும். இப்போது அந்த முகக்கவசத்தை வைத்து நான் ஒரு கருத்தை கூறுகிறேன். இன்றைக்கு எங்கும் முகக்கவசம் அணிந்தவர்களைப் பார்க்கிறோம். அதை அணிந்திருக்கும் போது நாம் சிரிப்பதை மற்றவர்களால் பார்க்க முடியவில்லை. அதேபோல், மற்றவர்கள் சிரிப்பதை நம்மால் பார்க்க முடியவில்லை.

தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் அதிமுக பழைய அதிமுக கட்சியே கிடையாது. பழைய அதிமுக என யாரும் எண்ணிவிடாதீர்கள். இது முகமூடி அணிந்திருக்கும் அதிமுகவாகும். அந்த முகமூடியை கழற்றினால், உள்ளே ஆர்எஸ்எஸ், பாஜ முகம் தெரியும். அதனுள் தமிழ் மொழி, கலாச்சாரத்தை அழிக்க வந்துள்ள பாசிச கொள்கை கொண்ட ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மறைந்து கொண்டிருக்கிறது.  இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தமிழர் கூட மற்றவர்கள் முன் தலை குனியமாட்டார்கள். ஆனால், அமித்ஷா, மோகன் பகவத் ஆகியோர் தலை குனியாமல் இருப்பதை விரும்ப மாட்டார்கள். எனது ஒரே கேள்வி, தமிழக முதல்வர், ஏன் அமித்ஷா, மோடியின் காலில் விழுந்து கிடக்க வேண்டும். ஒரு தமிழரும் செய்யாத காரியத்தை தமிழக முதல்வர் மட்டும் ஏன் செய்கிறார். இது நமது பண்பாட்டிற்கு எதிரானது அல்லவா?. மோடி முன் முதல்வர் தலைகுனிந்து நிற்க காரணம் என்னவென்றால், அவர்களிடம் அமலாக்கத்துறை, சிபிஐ புலனாய்வு பிரிவு இருக்கிறது.

தவறு செய்த அவர், தன்னை காப்பாற்றிக் கொள்ள தலை குனிந்து நிற்கிறார். வேறு வழியே இல்லாமல் அப்படி இருக்கிறார். ஆனால், இதற்கெல்லாம் ஒரு விலையை அவர்கள் கொடுத்தாக வேண்டும். அதுவும் ஒவ்வொரு தமிழர்களிடமும் மோடியும், அமித்ஷாவும் கட்டாயம் அதற்கான விலையைக் கொடுக்கவில்லை என்றால், மிகப்பெரிய விலையை தமிழக மக்கள் கொடுப்பார்கள். மக்களிடம் இருக்கும் தமிழ் மொழி உணர்வு, பண்பாடு, மரபு, பழக்கவழக்கம், முதல்வரிடம் இல்லை. ஏனென்றால், தமிழ் மொழி உணர்வு, பண்பாட்டைக் காப்பாற்றவே அனைவரும் விரும்புவார்கள்.

நாட்டின் மிகப்பெரிய வலிமை, சிறு குறு தொழில் நிறுவனங்கள் தான். தமிழகத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். தமிழக உற்பத்தி பொருட்களால், நாடு இயங்கும். மரண படுக்கையில் இருக்கும் ஒரு நோயாளி ஆம்புலன்சை வரவழைத்தால்,அதிலும் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பாகங்கள் கட்டாயம் இருக்கும். ஆனால், பணமதிப்பிழப்பு,ஜிஎஸ்டி வரி என்னும் இருமுனை தாக்குதலால், தமிழகத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களை அழித்துவிட்டார்கள்.

லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி வாழ்க்கையை இழந்து நிற்கிறார்கள். தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கும் வகையில் ஏன் செயல்படுகிறீர்கள் என மோடியிடம் கேட்காமல் முதல்வர் ஒதுங்கி நிற்கிறார். 3 வேளாண் திருத்தச் சட்டங்களால் நாடு முழுவதும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த சட்டத்தை ஏன் நிறைவேற்ற வேண்டும் என எதிர்த்துக் கேட்கும் துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை. புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து திட்டமிட்டே தமிழகத்திற்குள் திணிக்கிறார்கள். நீட் தேர்வால்,தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். அதனை எதிர்த்து முதல்வர் குரல் கொடுத்துள்ளாரா என்றால் அது இல்லை. ஒட்டுமொத்தமாகத் தமிழர்களுக்கான முதல்வராக அவர் இல்லை என்றே கூற வேண்டும்.

மோடியும், அமித்ஷாவும் எதைச் சொன்னாலும், அனுமதிக்கும் முதல்வராக இருக்கிறார். இந்த நாட்டை பிளவு படுத்தும் செயல்களை எதிர்த்து கேட்பதில்லை. நான் தமிழையும், தமிழர்களையும் புரிந்து கொண்டுள்ளேன். உங்களின் வரலாறு,பண்பாடு எனக்குள்ளும் இருக்கிறது. அப்படிப்பட்ட மனநிலையில் தான், எனது எண்ண ஓட்டங்கள் உள்ளது. நான் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். என்றைக்கும் தமிழ் மொழி,உணர்வு மீதான தாக்குதலை தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஆர்எஸ்எஸ், பாஜவுடன் நடத்தும் இந்த தேர்தல் போர், இத்தோடு முடியப்போவதில்லை. அவர்கள் தமிழ்நாட்டின் மீது மறுபடியும் தாக்குதல் நடத்துவார்கள். தற்போதே முடிந்துவிட்டது என எண்ணக்கூடாது. காரணம்,அவர்களிடம் ஏகப்பட்ட பணம், ஆட்கள் உள்ளார்கள். மீண்டும் தமிழகத்திற்குள் நுழைய முயற்சி செய்வார்கள். அவர்களை முற்றிலும் தடுக்க ஒரே வழி, தமிழ்நாட்டில் அகற்றுவது போல், டெல்லியிலும் அகற்றியாக வேண்டும்.

தமிழ்நாடு மட்டும் பாஜவால் பாதிக்கப்படவில்லை. ஒவ்வொரு மாநிலமும் பாதிப்படைந்துள்ளது. ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில நண்பர்களுக்கு உதவி செய்வதற்காகவும், பணத்திற்காகவும்,ஒரு திட்டத்தைத் தீட்டிச் செயல்படுத்துகின்றனர். அதனால் தான்,மாநிலங்களின் மொழி, பண்பாடு,பழக்கவழக்கம் அழிப்பிற்கு விலை கொடுக்கும் நிலையை அவர்கள் தற்போது உருவாக்கியுள்ளார்கள்.

தமிழர்கள் மிகவும் எளிமையானவர்கள். எனது அனுபவத்தில் அதை நான் புரிந்து கொண்டுள்ளேன். எனது பாட்டியும், தந்தையும் ஒரு சிறிய அளவில் தமிழர்கள் மீது அன்பு செலுத்தினால், அதற்கு மிகப்பெரிய அளவில் அன்பைத் தமிழக மக்கள் வாரி வழங்கியுள்ளார்கள். நான் சிறு அன்போ, அக்கறையோ, பாசத்தையோ செலுத்தினால், அதற்குப் பன்மடங்கு அளவிற்கு அன்பு, பாசம், அக்கறையை எனக்குத் தருகிறீர்கள்.

தமிழர்களைப் புரிந்து கொள்ள அன்பு, பாசம், அக்கறை போதுமானது. அதை மோடியோ, ஆர்எஸ்எஸ் அமைப்போ புரிந்து கொள்ளவில்லை. தமிழர்களை அடைய அது ஒன்று தான் வழி எனத் தெரிந்து கொள்ளாமல், கோபத்தையும்,ஆத்திரத்தையும் காட்டுகிறார்கள். இந்த தேர்தலில், அதனைத் தமிழக மக்கள் புரிய வைப்பார்கள். .

உண்மையில் இந்த தேர்தலே தேவையில்லை. இன்றைய சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் தமிழக  முதல்வர் பொறுப்பில் இருக்கிறார் என்று சொல்ல முடியும். இதுதான் உண்மையான நிலையாகும். ஆனால், தேர்தல் நடத்தி அதனை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது” எனப் பேசினார்.