ulagamazhiyapokiradhu

ஹப்பிள் டெலஸ்கோப்பில் இருந்து வந்த அந்த குறுஞ்செய்தி–ஒட்டு மொத்த இஸ்ரோவின் அட்ரீனளையும் ஏகத்திற்கும் ஏற்றியது. ஷிட்…பகவானே…பாப்ப்ரே ..என்று பல வசனங்கள் பறந்தன.

“இதென்ன டாக்டர்..புது கூத்து?” மோகன் மனதில் இருந்த பதட்டம் வாய்-கண்கள்-கைகள் என அனைத்திலும் தெரிந்தது.

“எஸ்..இட்ஸ் ட்ரூ…இந்த பூமி அழியப் போகிறது…” டாக்டர்.பாண்டியன் நிதானமாக பதில் சொன்னார்.டாக்டர் என்றால் எம்பிபிஎஸ் டாக்டர் அல்ல.அஸ்ட்ரோ பிசிக்ஸ்ல் ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்றவர்.தன் பெயரை விட நீளமான பட்டங்களைப் பெற்றவர்.அதனால் சுருக்கமாக டாக்டர் என்று மட்டும் போட்டுக் கொண்டார்.

“டாக்டர் ஹவ்?நம்ம ஹை ப்ரிசீசியன் ராடர்ஸ்-ஆப்டிகல் தெர்மல் டெலஸ்கோப்ஸ் இதெல்லாம் பணியாரம் சுட்டுகிட்டுருந்துச்சா? அதுங்க கண்ணுல இருந்து,இது எப்படி தப்பிச்சது?அட நம்மள விடுங்க நாசா..அவங்களோட மிர் ? என்ன டாக்டர் இது…..ஹப்பிள் டெலஸ்கோப்பை ஏலியன்ஸ் ஹேக் பண்ணிட்டாங்களா?”

“நோ..நோ…நோ சான்ஸ் பார் தட்…மெசேஜ் உண்மைதான்…இப்பத்தான் நான் அந்த கிரகத்தோட பெரபோலிக் பாதையைப் பார்த்தேன்….பெர்பெக்ட்…கனக்கச்சிதமா வந்து மோதப் போகுது..அந்த வழி தவறிய ஆட்டுகுட்டி…”

“நல்லாருக்கு டாக்டர்..”

“நல்லாருக்கா..அப்ப அதையே பேரா வச்சுறலாம்…”

“எது..அந்த கெரகம் புடிச்ச கிரகத்துக்கு பேரு ஆட்டுக்குட்டியா?”

“வேற என்ன செய்யச் சொல்லுற…தட்ஸ் கால்ட் பார்மாலிடீஸ்…ஓகே நாசாவை அலர்ட் பண்ணுவோம்..”

“பூமி இருக்கும் மில்கி வே கேலக்சியிலிருந்து எழநூற்றி சொச்சம் லைட் இயர்ஸ் தொலைவிலிருக்கும் ஆண்டிரோமெடாவிலிருந்து வழி தப்பிய ஒரு கிரகம் பூமியில் மோதப் போகிறது.அந்த கிரகத்திற்கு “ஆட்டுக்குட்டி”என்று பெயர்”

இமெயில் அலர்ட்டை அனுப்பி வைத்து விட்டு.மீண்டும் கணிணித் திரைக்குள் ஆழ்ந்தார்கள்.அனைவரது முகத்திலும் பதட்டம்-கவலை-பரபரப்பு.பலர் விடுமுறை எடுத்துக் கொண்டும்-சிலர் பெர்மிஷன் வாங்கிக் கொண்டும் வீடுகளுக்குப் பறந்தார்கள்.செய்தி கசிந்தது.உலகம் முழுவதும் கசிந்தது.

“டாக்டர்..டிபன்ஸ் ல இருந்து கால்…பிரமோஸ் வச்சு அடிக்க முடியுமான்னு கேக்குறாங்க?”

“முடியாதுன்னு சொல்லு…இப்பத்தான் ஜப்பான் காரன் ஆட்டுக்குட்டியை,பசிபிக் கடல்ல மரியான டிரன்ச் குள்ள தள்ளிரலாமான்ன்னு பாத்தான்-பெயிலியர்.,அமெரிக்கன்ஸ் டோமஹாக்கை டிரை பண்ணுனாங்க நோ சக்சஸ்..இப்படி என்னென்னமோ டிரைப் பண்ணிப் பார்த்துட்டு…ஒண்ணும் வேலைகாகாம இன்டர்நேஷனல் ஹாலிடே ன்னு டிக்ளேர் பண்ணிட்டாங்க…நம்ம கவர்மெண்ட் தான் லேட். ..நியூ யார்க் ல நாஸ்டாக் படுத்துருச்சு….தட்ஸ் ஆல் மை பாய்..திஸ் இஸ் த எண்டு ஆப் தி வேர்ல்ட்…”

டாக்டர் பாண்டியனின் பதிலை அப்படியே டிபன்ஸ் க்கு சொல்லப்பட்டது.ஒரு மணி நேரம் மிகப் பரபரப்பாக கழிந்தது.உலகத்தின் அனைத்து வானியல்-நிலையங்கள்–ஆராய்சிக் கூடங்கள் என அனைத்தும் அமைதியாயின.அனைத்து அலுவலகங்களுக்கும் காரணம் சொல்லாமல் விடுமுறை தரப்பட்டது.நாளை எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று மட்டும் குறுஞ் செய்திகள் பறந்தன.மக்களிடம் உண்மையைச் சொன்னால்–வாழப் போகும் கடைசி நாளில் என்று ஏதேதோ செய்யத் துணிவார்கள்.சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கெட்டு விடும்.இது தான் தன் வாழ்நாளின் இறுதி நாள் என்று தெரிந்து விட்டவர்கள் முன் எந்தச் சட்டமும் வேலை செய்யாது.ஒரு வேளை அந்த ஆட்டுக்குட்டி போனால் போகிறதென்று மனது மாறினால்?அல்லது கடைசி நேரத்தில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால்?…எதற்கும் மக்களை கலவரப்படுத்தாமல் விட்டுவிடலாம் என்று அரசாங்கங்கள் முடிவெடுத்தன.

“டாக்டர்…நோ…அப்ப ஆட்டம் பாம் எதாச்சும் ?” மோகனின் மூளை ஆட்டுக்குட்டியை எப்படி சிதைப்பது என்றே யோசித்தது…

“தம்பி மோகா…இது சாதாரண கிரகம் அல்ல…பிளாக் ஹோல்…பிளாக் ஹோல் தெரியும்ல?”

“ஆஹா…ஷிட்…பிளாக் ஹோல் அது..அதை நோக்கி எது வந்தாலும் அதை அதுக்குள்ளே இழுத்து வச்சுக்குமே!!!… மிக மிக அதிக பூமியை விட கோடிக்கணக்கான மடங்கு புவி ஈர்ப்புச் சக்தி கொண்டதாச்சே…லைட்-சவுண்டுன்னு எதுவும் தப்பிக்க முடியாதே…அடடா…அதனால தான் அது நம்ம ரேடார்ஸ்..டெலஸ்கோப்ஸ் ன்னு எல்லாத்தையும் ஏமாத்திருச்சா…இப்ப என்ன டாக்டர் பண்ணுறது? எத்தன மணிக்கு கொலிஷன் கோயிங் டு ஹேப்பன்?”

“அதே தான்…நாமலே ஹை எண்டு நீயுட்டிரிநோ மேப்பிங் ல தான் கண்டேபுடிச்சோம்..என்ன கேட்ட டைமிங்கா? அது சரியா நாளைக்கு அதிகாலை பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்னாடி ரெண்டரை மணிக்கு…”

“ரெண்டரைக்கா….?”

“யெஸ் யங் மேன்….சோ கோ ஹோம்….சி யு இன் ஹெல்…”

இஸ்ரோ தளத்தின் அடியில் இருந்த தன் ஆடி கியூ சீரியஸ் காரை எடுத்தான்.அங்கே இங்கே திருப்பி மவுண்ட் ரோட்டைப் பிடித்தான்.வீட்டுக்கு வந்தான்.

“என்னங்க…சீக்கிரமா வந்துட்டீங்க?” இரவு பத்தரை மணிக்கு-காலிங் பெல் சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்து பார்த்து–அங்கே தன் கணவன் நிற்பதைப் பார்த்து தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டால் உமா.மோகன் மனைவி.காதல் மனைவி.வெவ்வேறு சாதிகள்.சாதி தான் பெரிது-அதைத் தவிர உலகில் வேறெதுவுமே பெரிதில்லை என்று இருவர் வீட்டிலும் கூறிவிட–இவர்கள் தங்கள் காதலே பெரிது என்று “பெரியார்-படத்தின்” முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.அதை விடுங்க அது போன வருஷம் நடந்த கதை.அதை தனியாக சொல்றேன்.

“ஆமா…இன்னைக்கு கொஞ்சம் ப்ரீ..அதான்..”

“அப்ப..பீச் போகலாமா…இல்ல வேண்டாம்..சினிமா..நோ இப்ப தியேட்டர் இருக்காது…”பத்தரை மணிக்கு தன் கணவன் இல்லம் வந்ததே பேரதிசயம் உமாவிற்கு.படபடவென எங்கு செல்லலாம் என்று திட்டங்கள் போட்டாள்.

“ம்மா…இரு..கொஞ்சம் காபி போடு…” நான் ரெப்ரஷ் பண்ணிட்டு வர்றேன் என்றவாறே ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தான்.

“இந்தாங்க…உளுந்த வடை…ரெடிமேட் மாவுல போட்டது…”

“காபி?”

“டென்..மினிட்ஸ்..”

உமாவிடம் சொல்லலாமா வேண்டாமா?சொன்னால் பதட்டப்படுவாளா?எப்படி எடுத்துக் கொள்வாளோ? என்ற சிந்தனையில் டிவியைப் போட்டான்.அதில் சென்னைக்கு மிக அருகில் இருக்கும் அந்தமானில் இருக்கும் இந்த இடத்தை நீங்க இன்னைக்கு வாங்குனா..நாளைக்கு..என்று நீண்ட விளம்பரத்தைப் பார்த்தான்..புன்னகைத்தான்…அதற்குள் காப்பி வந்துவிட்டிருந்தது.

இருவரும் சேர்ந்தே அன்றைய டின்னரை முடித்தார்கள்.அடுத்து படுக்கை.

ulagamazhiyapokiradhu1

மெதுவாக உமாவிடம் பேச்சுக் கொடுத்தான்.உமாவிடம் விஷயத்தைச் சொன்னான்.அவள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.புன்னகைத்தாள்.

“அப்பாட..காலைல சீக்கிரம் பால்காரன் வந்துருவானே..நீங்க ஆபிஸ் போகணுமே…பிரேக்பாஸ்ட்..லஞ்ச் பண்ணனுமே ன்னு டென்ஷன் எதுவும் இல்லாம இன்னைக்கு நிம்மதியா தூங்கலாம்…நாளைக்கு காலைல நாலரை மணிக்கு எந்திரிக்கவும் வேண்டாம்” என்றவாறே தன் செல்போன்–அலாரம் டைம்பீஸ்களை அனைத்து வைத்தாள்.

கடிகாரத்தில் மணி இரண்டரையைத் தொட்டது.

-ஜி.துரை மோகனராசு