டெல்லி சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு… பொதிகை இல்லத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை…

Must read

டெல்லி: டெல்லி சென்றடைந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.அவருக்கு தமிழ்நாடு இல்லமான, பொதிகை இல்லத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக மு.க.ஸ்டாலின் இன்று காலை தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்பட அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர். காலை 10 மணியளவில் டெல்லி விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, கனிமொழி உள்பட பலர் விமான நிலையம் சென்று அவரை வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து மத்தியஅரசின் இசட் பிளஸ் பாதுகாப்போடு தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார்.

டெல்லியில் பொதிகை இல்லமான  தமிழ்நாடு இல்லத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை  அளிக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று மாலை பிரதமர் அலுவலகத்திற்கு செல்லும் மு.க.ஸ்டாலின், மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் கொடுக்க உள்ளார். இந்த ஆலோசனையின்போது,  ‘தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் நாளை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் மு.க.ஸ்டாலின் நாளை சந்தித்து பேசுகிறார்.

More articles

Latest article