டில்லி:

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மத்தியில் ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, மாநில கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் அணுகு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்த நிலையில், அமராவதியை தலைமையிடமாக கொண்ட ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்குறுத்தி அளித்த மோடி, தற்போது சிறப்பு அந்தந்து அளிக்க மறுத்து வருகிறார்.

இதன் காரணமாக பாஜகவுக்கும், தெலுங்கு தேசத்துக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது.

மத்திய பாஜக அரசில் அமைச்சர்களாக இருந்த தனது கட்சி எம்.பி.க்களை ராஜினாமா செய்ய கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டதை தொடர்ந்த அவர்களும் மந்திரி பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டத் தொடர் மார்ச் 5 முதல் நடைபெற்று வருகிறது. தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் உள்பட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர எம்.பி.க்கள் கடந்த 5ந்தேதி முதல், பாராளுமன்ற வளாகத்தில்  தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதையடுத்து பாராளுமன்ற இரு அவைகளையும் முடக்கி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற உ.பி., பீகார் லோக்சபா இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்த நிலையில், மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் கட்சி தலைவர் ஜெகன் ரெட்டி முயற்சி மேற் கொண்டு வருகிறார்.

பாராளுமன்றத்தில் நாளை மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் வகையில்,  அனைத்து கட்சி தலைவர்களிடமும், முக்கிய உறுப்பினர்களிடமும் ஆதரவு கோரி வருகிறார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  கட்சிக்கு பாராளுமன்றத்தில் 6 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.