வாலாஜாபாத்: பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசன் தனது இருசக்கர வாகனத்தில்  ‘வீலீங்’ செய்தபோது எதிர்பாராதவிதமாக தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. அவர்  தூக்கி வீசப்பட்ட  வீடியோ வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் வாகன ஓட்டிகளிடையே பிரபலமானவர் டியூபர் டிடிஎஃப் வாசன். இவர் கோவையைச் சேர்ந்தவர்.  ‘யூடியூபர்’ டி.டி.எப். வாசன். இவர், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி இளைஞர்களிடம் பிரபலமானார் . இவரது பைக் சாகசங்களை காண,   லட்ச கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். அவ்வப்போது இவர் சாலையில் பயணம் செய்து சர்ச்சையில் சிக்குவார். போலீஸார் அவர் மீது வழக்கு தொடர்ந்து, எச்சரித்து அனுப்புவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் அவரது பிறந்தநாள் அன்று அவர் நடிக்கும் ‘மஞ்சள் வீரன்’ படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது. மணிக்கு 299 கி.மீ வேகத்தில் படப்பிடிப்பு என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இவர் தனது பிறந்தநாளை ஒட்டி, தன்னைப் பின்தொடர்வோருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். இந்த மீட்டப்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போலீஸ் எச்சரிக்கும் அளவுக்கு அது சென்றது. அவரது அழைப்பை ஏற்று வந்த ஆயிரக்கணக்கானோரில் பலரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். இவரது இந்த ‘மாஸ்’ சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்களாகவும் எழுந்தன.

டிடிஎஃப் வாசன், தற்போது ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தநிலையில் டி.டி.எப். வாசன், தனது  விலை உயர்ந்த தனது மோட்டார்சைக்கிளில் சென்னையில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.  காஞ்சீபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்று ‘வீலீங்’ செய்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதி தூக்கி வீசியது. இதில் டி.டி.எப்.வாசன், மோட்டார்சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு பலமுறை குட்டிக்கரணம் அடித்தபடி கீழே விழுந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த டி.டி.எப்.வாசனை மீட்டு காஞ்சீபுரம் அருகில் உள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட போதிலும் அவர் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். எனினும் கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை அம்பத்தூரில் உள்ள நண்பர் அஜீஸ் இல்லத்தில் டி.டி.எப்.வாசன் தற்போது ஒய்வு எடுத்து வருகிறார். அவரைக் காண நண்பர்கள் பலரும் அஜீஸ் இல்லத்தில் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்து குறித்து   பாலுசெட்டி சத்திரம் போலீசார் டிடிஎஃப் வாசன்மீது இரு பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததற்காக TTF வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது/  கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் பிற விதிமீறல்களுக்காக அவர் மீது ஐபிசி 279/337 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

,