பாகிஸ்தான் உளவுத்துறை வலையமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாகவும் ஹரியானாவைச் சேர்ந்த பயண யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவின் ஹிசாரில் வசிக்கும் ஹரிஸ் குமாரின் மகள் ஜோதி, ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதற்காக இரண்டு முறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ள ‘ஜோ’ வீடியோக்களை தனது சேனலில் பதிவிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்தபோது ​​புதுதில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் பாகிஸ்தான் அதிகாரி எஹ்சான்-உர்-ரஹீமை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

ஜோதி மல்ஹோத்ரா-வை எஹ்சான் பாகிஸ்தான் புலனாய்வு நிறுவனங்களுக்கு (PIOs) அறிமுகம் செய்து வைத்ததாகவும் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற தளங்களில் அந்த PIOக்களுடன் அவர் தீவிரமாக தொடர்பில் இருந்ததாகவும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள இடங்கள் தொடர்பான முக்கியமான தகவல்களை இந்த உளவு அமைப்புகளுடன் ஜோதி மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஜோதி ஒரு PIO உடன் நெருங்கிய உறவில் ஈடுபட்டதாகவும் அவருடன் இந்தோனேசியாவின் பாலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதும் அவரது பாஸ்போர்ட் மற்றும் விசா ஆதாரங்களுடன் மத்திய அரசு தற்போது கையும் களவுமாக பிடித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு மே 13, 2025 அன்று இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத நபராக அறிவிக்கப்பட்டு,எஹ்சான் நாடுகடத்தப்பட்டார்.

இந்த நிலையில் ஹரியானாவில் உள்ள பலருடன் இணைந்து எஹ்சான் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் இதில் ஜோதி மல்ஹோத்ரா-வுக்கும் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜோதி மல்ஹோத்ராவை கைது செய்த போலீசார் அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 152 மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம், 1923 இன் பிரிவு 3, 4 மற்றும் 5 இன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் நீதிமன்றம் அவரை ஐந்து நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.