இந்தியா – பாகிஸ்தான் போருக்குப் பிறகு உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை மேலும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ள மத்திய அரசு அந்த குழுவுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் தலைமையேற்பார் என்று அறிவித்துள்ளது.
இந்தக் குழுவில் பாஜக-வைச் சேர்ந்த ரவிசங்கர் பிரசாத் மற்றும் பைஜயந்த் பாண்டா, தவிர, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சஞ்சய் குமார் ஜா, திமுகவின் கனிமொழி, என்சிபி (எஸ்பி)யின் சுப்ரியா சுலே, மற்றும் சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையடுத்து நட்பு மற்றும் செல்வாக்குள்ள நாடுகளுக்கு செல்ல இருக்கும் இந்தக் குழு பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய நிலைப்பாடு குறித்து அந்நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மோடி பிரதமராக பொறுப்பேற்ற பதினோரு ஆண்டுகளில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒரே நேரத்தில் பல்வேறு நாடுகளுக்கு செல்ல இருப்பது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த குழுவில் இடம்பெற உள்ளவர்கள் குறித்து அக்கட்சி தேர்வு செய்து அனுப்பிய நபர்களை விடுத்து சஷி தரூரரை மத்திய அரசு தன்னிச்சையாக தேர்வு செய்திருப்பதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கட்சியின் தேர்வை கவனத்தில் கொள்ளாமல் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுவது காங்கிரஸ் கட்சியை உதாசீனப்படுத்துவதாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் அனைத்துக் கட்சிக் குழுக்களுக்கு நான்கு எம்.பி.க்களின் பெயர்களை சமர்ப்பிக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டதாகவும், ஆனந்த் சர்மா, கௌரவ் கோகோய், சையத் நசீர் உசேன் மற்றும் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் ஆகியோரை பரிந்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“காங்கிரஸ் கட்சியில் இருப்பதற்கும் காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது” கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தையும் அரசாங்கம் அணுகியதாகவும், கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் அவர்களிடம் கூறியதாகவும் ஜெய்ராம் ரமேஷ் தெளிவுபடுத்தினார்.
ஒரு ஜனநாயக அமைப்பில், தனிப்பட்ட எம்.பி.க்கள் அதிகாரப்பூர்வ குழுவில் அனுப்பப்படும்போது, எம்.பி.க்கள் கட்சியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், பாஜக நாரத முனி போல் கலகத்தில் ஈடுபட நினைப்பதாகவும் தனிப்பட்ட நபர்களிடம் அவர்களின் விருப்பத்தைக் கேட்பது “நேர்மையற்றது” மற்றும் “முற்றிலும் குறும்புத்தனமானது” என்றும் கூறினார்.
பஹல்காம் தாக்குதல் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கமளிக்க முடியாத பிரதமர் மோடி மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர்களின் கடிதங்களுக்கும் இதுவரை பதிலளிக்கவில்லை இந்த நிலையில் வெளிநாடு செல்ல உள்ள இந்த குழுவால் பாஜக அடைய விரும்பும் நன்மை என்ன என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.