டில்லி:

ன்று உலக காசநோய் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காசநோயற்ற உலகை உருவாக்க தலைவர்கள் தோன்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காச நோய் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பதிவு மூலம்  நாட்டு மக்களுக்கு வேண்டுகாள் விடுத்துள்ளார்.

அதில்,  காசநோயை முடிவுக்கு கொண்டுவரும் சவாலை நாட்டு மக்கள், அமைப்புகள் முன்னின்று எதிர்கொள்ள வேண்டும் என்றும்,  காசநோயற்ற உலகை உருவாக்க தலைவர்கள் தோன்ற வேண்டும் அவர் கூறியுள்ளார்.

மார்ச் 24ம் தேதி உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் “உலக காசநோய் தினம்” கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலகளவில் எச்.ஐ.வி, மலேரியாவைக் காட்டிலும் காச நோயால் உயிரிழப்பவர்கள் அதிகம் என்றும், 2015ல் காச நோயால் பாதிக்கப்பட்டோர் 28 லட்சம்; உயிரிழந்தோர் 4.83 லட்சம் பேர் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், உலகளவில் காசநோய் பாதிப்புக்குள்ளானோரில் 24 சதவிகிதத்தினர் இந்தியர்கள் என்றும்,  இந்தியாவில் 10 லட்சம் பேர் காசநோய் பரிசோதனைக்கு வராமல் தவிர்த்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் காசநோய் சிகிச்சைக்கு வராமலேயே இருக்கிறார்கள் என்றும், இவர்களால்,  ஆண்டுக்கு 10 முதல் 15 நபர்களுக்குக் காசநோயை பரப்பப்படுகிறது என்றும் கூறி உள்ளது.

காசநோய் அறிகுறிகள்:

► தொடர்ந்து இருமல், உடல் எடை குறைதல், மாலைநேரக் காய்ச்சல், பசியின்மை, சளியில் ரத்தம் போன்றவை காசநோய்க்கான அறிகுறிகள்.

► நோயாளிகள் 6 மாதங்கள் சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

► காசநோய் வராமல் தடுக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் இல்லை.

► மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு காசநோய் கிருமிகள் தாக்கப்பட்ட நிலையில் இருக்கும்.

► ஆனால் உடலின் எதிர்ப்பு சக்தி குறையும் நபர்களைத்தான் காசநோயாளியாக மாற்றும்.

► சர்க்கரை நோய், புகையிலை மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு காசநோய்த் தொற்று மிக எளிதாக உண்டாகும்.