இஸ்ரோ வெற்றியின் பின்னனியில் பெண்கள் பங்கு
இஸ்ரோ வெற்றியின் பின்னனியில் பெண்கள் பங்கு

இஸ்ரோ இன்று பி.எஸ்.எல்.வி சி-37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலகச் சாதனையைப் படைத்தது. அமெரிக்கா, இஸ்ரேல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் 103 செயற்கைக்கோள்கள் மற்றும் வானிலை குறித்த இந்தியாவின் கார்ட்டோசாட்t-2 ஆகிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.

இதற்குமுன் ரஷ்யா 37 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதே சாதனையாக இருந்தது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று ( 15-ம் தேதி ) காலை 9.28 மணிக்கு104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதன் மூலம், ரஷ்யாவின் சாதனையை முறியடித்துள்ளது இந்தியா. இந்திய விண்வெளத்துறையின் இந்த சாதனையில் பெண்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில், பெண்களால் எல்லாத்துறைகளிலும் பிரகாசிக்கமுடியாது எனும் கருத்துணர்வுக்கு சவால் விடும் விதமாக தற்போது. இஸ்ரோ நிர்வாக பிரிவில் பணிபுரியும் பெண்கள் சாதித்து காட்டியுள்ளனர்.

இஸ்ரோவில் குறிப்பிடும்படியான பெண்கள் மூவரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்:
ரித்து கரிதால், துணை இயக்குநர், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்
அனுராதா டி.கே., ஜியோசாட் திட்ட இயக்குநர், இஸ்ரோ செயற்கைக்கோள் மையம்,
நந்தினி ஹரிநாத், துணை இயக்குநர், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்
ரித்து கரிதால் :

ரித்து கரிதால் தமது பால்ய பருவத்தில் இருந்தே வானம், சந்திரன், நட்சத்திரங்கள் குறித்த சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு அவை குறித்து இஸ்ரோவும்(ISRO), அமெரிக்காவின் நாசாவும் (NASA) வெளியிட்ட செய்திகளை ஒன்றுவிடாமல் சேகரித்து, , விண்வெளி ஆராய்ச்சி குறித்த எல்லா சின்ன விவரங்களையும் விடாமல் படிப்பது என மிக ஆர்வத்தோடு இருந்தார். தமது ஆர்வத்தை தனது கல்வி மற்றும் வேலையாய் மாற்றிக்கொண்டவர். தற்போது இஸ்ரோவில் பெரிய விஞ்ஞானி. செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பிய மங்கள்யான் திட்டப்பணிகளில் மகத்தான சேவையாற்றிய பெண்மணி.

“சிறுவயது முதலே இஸ்ரோ மீது ஈர்ப்பு இருந்ததால் பட்ட மேற்படிப்பு முடிந்தவுடன், ”இஸ்ரோவில் ஒரு காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பித்தேன். தற்போது 19 ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று நினைவு கூர்ந்தார் கரிதால்.

இரவு பகலாக உழைக்க வேண்டிய தருணங்களில், குடும்பத்தினரின் ஒத்துழைப்பு முக்கிய பங்குவகித்ததாகவும், இந்தியாவின் கடைக்கோடி மனிதனுக்கும் பலன் சென்றடையும் வரை தங்களின் பணி தொடரும் என தெரிவித்தார்.
நந்தினி ஹரிநாத் தொலைக்காட்சியில் `ஸ்டார் ட்ரெக்` (Star Trek ) என்ற நிகழ்ச்சியைப் பார்த்தது தான் நந்தினி ஹரிநாத்தின் முதல் அறிவியல் அனுபவம்.

பொறியாளர் தந்தைக்கும் கணித ஆசிரியைக்கும் பிறந்தவர் நந்தினி. அவர் குடும்பத்தினருக்கு இயற்பியலில் ஆர்வம் அதிகம். குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து `ஸ்டார் ட்ரெக்`நிகழ்ச்சி மற்றும் அறிவியல் கவிதைகள் தொடர்பான எல்லா நிகழ்ச்சிகளையும் விரும்பிப் பார்ப்பார்கள்.’ அப்போது சிறுமி ந்ந்தினி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்று யோசித்தது இல்லை
”அது இயல்பாக நடந்தது,” என்கிறார் நந்தினி ஹரிநாத்.

”இது தான் நாம் முதலில் முறையாக விண்ணப்பித்த வேலை. எனக்கு வேலை கிடைத்தது. தற்போது 20 ஆண்டுகள் ஆகிவிட்டது.

செவ்வாய்க் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பிய திட்டத்தில் வேலை செய்தது எனது வாழ்க்கையில் ஒரு பெரிய சாதனை காலம். இந்தத் திட்டம் இஸ்ரோவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு முக்கியமான திட்டம். இந்தத் திட்டம் நம்மை ஒரு உயர்வான தளத்தில் கொண்டுவைத்தது. பல வெளி நாடுகளும் நம்மோடு இணைய எதிர்பார்ப்புடன் உள்ளனர். எங்களுக்கு கிடைத்த முக்கியத்துவம் மற்றும் கவனம் நியாயமான ஒன்று தான்,” என்றார்.

”இஸ்ரோவிற்குள் என்ன நடக்கிறது என்பதை பார்க்க பொது மக்களை முதல் முறையாக இஸ்ரோ அனுமதித்தது. நாங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை எழுதினோம். எங்களுக்கு ஒரு பேஸ்புக் பக்கத்தை தொடங்கினோம். இப்பொழுது உலகின் கவனத்திற்கு பெண்களின் பங்களிப்பு வந்தது,” என்றார்.

புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் மங்கள்யான் படம் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக வுள்ளது. மங்கள்யானில் பணிபுரிந்த்து மிகப்பெரிய பெரிமிதம் எனவும் கூறினார்,. இன்னும் சாதிக்க பல சவால்கள் உள்ளன. இன்னும் பல கோள்கள் ஆராயப்படவேண்டும்” என்கிறார் தன் பொறுப்பை உணர்ந்தவராய்.

அனுராதா:
இஸ்ரோவில் கடந்த 34 ஆண்டுகளாகப் பணிபுரியும் அனுராதா, விண்வெளி தொடர்பாக சிந்திக்கத் தொடங்கியபோது அவருக்கு ஒன்பதே வயதுதான்.
தமது சிறு வயதில், ‘நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால்பதித்த, அப்போலோ விண்வெளி பயண திட்டம் நிறைவேறிய போது அதுகுறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொண்ட இவர், தமது தாய்மொழியான கன்னடத்தில் நிலவில் மனிதன் கால் பதித்தது குறீத்து ஒரு கவிதை எழுதியவர்.
இஸ்ரோவில் உள்ள பெண் விஞ்ஞானிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அனுராதா பூமியின் மையத்தில் இருந்து, குறைந்தது 36,000 கிலோமீட்டர் தொலைவில் , விண்வெளியில் நிறுத்தப்படும் செயற்கைக்கோளை அனுப்புவதில் நிபுணத்துவம் பெற்றவர்.

”மற்ற பாடத்திட்டங்களைவிட அறிவியல் பாடத்தை எளிதில், மிகவும் இயல்பாய் படித்த இவர், 1982ல் இஸ்ரோவில் சேர்ந்தார். இவர் பணியில் சேர்ந்தபோது வெகு சில பெண்கள்தான் இஸ்ரோவில் இருந்தனர். அதிலும் குறிப்பாய் பொறியியல் துறையில் மிகவும் குறைவான அளவில் தான் பெண்கள் இருந்தனர். ”என்னோடு பொறியியல் பயின்ற ஐந்து, ஆறு பெண் பெண்கள் பொறியியலாளர்கள் இஸ்ரோவில் சேர்ந்தனர். நாங்கள் தனித்து காணப்பட்டோம். தற்போது இஸ்ரோவில் மொத்தம் உள்ள 16,000 ஊழியர்களில், 20 முதல் 25 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் உள்ளனர். தற்போது நாங்கள் தனித்து தெரிவதில்லை,” புன்னகையுடன் கூறுகின்றார் அனுராதா.
இஸ்ரோவில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இன்னும் பாதி அளவை விட குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளது.

ஏனெனில், ”நாம் இன்னும் கலாசார மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்லாமல் பல பெண்கள் வீட்டில் சமையல் வேலைகள் செய்வது தான் முதல் கடமை என்று நினைக்கிறார்கள் இந்த நினைப்பை பெண்கள் தூக்கியெறிய வேண்டும். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் பெண்கள் “ சிறு வயதில் இருந்தே தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார் அனுராதா.
மேலும், இஸ்ரோவில் பதவி உயர்வின் போது பாலினம் பார்க்கப்படுவதில்லை என்றும், ஒருவரின் திறமை மற்றும் அனுபவமுமே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவ்தாகவும் அனுராதா தெரிவித்தார்.

”விண்வெளி ஆராய்ச்சியில் பெண்கள் பணிபுரிகிறார்கள் என்பதை அறிந்தால், பல பெண் குழந்தைகள் உத்வேகம் அடைவார்கள். தங்களாலும் முடியும் என்ற நம்பிக்கையைப் பெறுவார்கள்,”எனவும் அவர் தெரிவித்தார்.
எனது வெற்றிக்கு நான் என்னை தயார்படுத்திக்கொண்டது தான் காரணம். நாம் ஒரு விஷயத்தை பெற வேண்டும் என்றால் ஒரு விஷயத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது தான் வாழ்க்கை . அதனால் நான் அலுவலக நேரத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் வேலையில் இருப்பேன். அதே போல் நான் வீட்டில் இருக்க வேண்டிய முக்கிய சந்தர்ப்பங்களில், வீட்டில் இருப்பேன்,” என்றார் அனுராதா.

பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோருக்கு, இப்பெண்மணிகள் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான் அது “, உங்கள் பெண்குழந்தைகளை, விண்வெளி விஞ்ஞானியாக்க விரும்பினால், அவர்களை அதற்காக சிறுவயது முதலே ஆயத்தப் படுத்துங்கள்” என்பது தான்.

சமவாய்ப்பு கிடைக்கப்பெற்றால் எல்லாத் தளங்களிலும் பெண்கள் சாதிப்பர். தற்போது பெண்கள் கால் பதிக்காத துறைகள் இல்லை. பெண்கள் வெற்றிக்கனி பறிக்காத இடங்களும் இல்லை. பெண்களுக்கு வானமே எல்லை. இந்திய விண்வெளித் துறையில் சாதனைப்படைக்கும் பெண்களைப் போற்றுவோம்.