பெண்ணுரிமை: திருமா – வைகோ மேடையில் மோதல்

Must read

 
எது பெண்ணுரிமை? என்பது பற்றி வைகோவும் திருமாவளவனும் ஒரு நூல்வெளியீட்டு விழாவில் மோதிக்கொண்டனர். இது பற்றிய விரவம் வருமாறு.
திருமதி ஜாய் ஐசக் எழுதிய ‘ இனியவளே உனக்காக’ என்கிற பெண்களுக்கான சிறப்பு நூல் வெளியீட்டுவிழா  காமராஜ் அரங்கத்தில் நடெபெற்றது.
.திருமதி ஜாய் ஐசக் சத்தியம் டிவி நிர்வாக இயக்குநர் ஐசக் லிவிங்ஸ்டனின் துணைவியாராவார்.
‘ இனியவளே உனக்காக’ நூலைப் பிரபல போதகர்  சகோதரர் மோகன் சி.லாசரஸ் வெளியிட்டார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல்..திருமாவளவன், நாம்தமிழர் கட்சித் தலைவர்  சீமான், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் நூலை எழுதிய திருமதி ஜாய் ஐசக்  பேசும்போது-. “என்  தாய் தந்தை இருவருமே ஆசிரியர்கள். என்னை என் பெற்றோர் நல்லபடி வளர்த்தார்கள். இன்று காலமாற்றம் என்கிற பெயரில் நடப்பதைப் பார்த்து வருத்தமாக இருக்கிறது .அண்மையில் பார்த்தேன், ஒரே ஒரு பெண் 10 பையன்களுடன் ஓட்டலில்  ஒன்றாக இருக்கிறாள். செல்பி, அரட்டை என்று பொறுப்பின்றி இருக்கிறாள்.பார்த்தால் வருத்தமாக இருக்கிறது . இது பெண்களுக்காகவே எழுதப்பட்ட நூல்..இன்று கு டும்பஅமைப்பு உடைந்து வருகிறது விவாகரத்து சகஜமாகி வருகிறது. கவலையாக இருக்கிறது.” என்றார்.
விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல்..திருமாவளவன் பேசும் போது.” சகோதரி ஜாய் ஐசக் தன் நூலில் நிறைய எழுதி இருக்கிறார். பெண்களை யாரும் அடக்கவில்லை. அவர்கள் அடங்கியிருக்கிறார்கள் என்று எழுதி இருக்கிறார்.அவரிடம் நான் முரண்படுகிறேன். இன்றைய நிலையில் அவருக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். ஆனால் குடும்பம் என்கிற அமைப்பின் மூலம் பெண் ஒடுக்கப் பட்டாள்.  பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான உரிமை, ஆண்களுக்கு நிகரான கல்வி, ஆண்களுக்கு நிகரான அதிகாரம் தராமல் ஒடுக்கிய அமைப்பு இந்தச்சமூக அமைப்பு” என்றவர் மென்மேலும் இதுபோனற நூல்களை எழுத வேண்டும் என்று வாழ்த்தினார்.
நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசும் போது, “பெண்ணுரிமை பற்றி, சம உரிமை பற்றி பாரதி பாடினார்; பாவேந்தர் பாடினார்; பெரியார் பேசினார்; ஆனால் அதற்குச் சட்ட வடிவமாக்கி அமல்படுத்த வைத்தவர் அம்பேத்கார்தான். திருமணத்தில் பத்து பொருத்தம் பார்ப்பவர்கள் மனப் பொருத்தம் பார்ப்பதில்லை..ஜாதகத்தில் எந்தக் கட்டத்திலும் மனப் பொருத்தம் இருப்பதில்லை. காதலில்தான் மனப் பொருத்தம் இருக்கிறது. ஆனால் காதலிக்கும் போது  யாரும் தன் குறைகளைச் சொல்வதில்லை எனவேதான் இன்று பிரச்சினை வருகிறது. தொலைக் காட்சித் தொடர்களிலிருந்து இன்றைய பெண்களை விடுவிக்க வேண்டும் அவற்றைப் பார்த்த பலர் மனநோயாளிகளாகியிருக்கிறார்கள் .இந்நூலை சகோதரி ஜாய் ஐசக்  எளிய தமிழில் சுவைபட  எழுதியுள்ளார்” என்று பாராட்டி வாழ்த்தினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, ” இன்றைய சூழலில் நான் ஜாய் ஐசக்குடன் உடன் படுகிறேன். நாம்  பெண்களைப் படிக்க வைக்கவில்லை, அவர்களுக்கு உரிமை கொடுக்க வில்லை என்பது தவறு  ” என்று திருமாவளவன் கருத்தை மறுத்தவர், தொடர்ந்து பேசும் போது, ”ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், நன் முல்லையார் காக்கைப் பாடினியார் போன்று பல பெண் கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். உலகில் எங்காவது இப்படிப் பெண்கவிஞர்கள் இருந்திருக்கிறார்களா? தமிழில்தான் இருந்திருக்கிறார்கள்.  ஒரு திருமணத்தை நடத்தி வைக்கும் உரிமையே அக்காலத்தில் பெண்களுக்குதான் இருந்தது..இப்படிப் பெண்களுக்கு உரிமை கொடுத்த தமிழ்ச் சமூகம் நம்முடையது.

இன்று நம் சமூகம் மேலைநாட்டுக் கலாச்சாரம் என்கிற மோக்த்தால் சீர் கெட்டுக் கிடக்கிறது. சென்னையில் பெண்கள் சீர் கெட்டு வருகிறார்கள் .எவ்வளவு பேர் நாகரிகம் என்கிற பெயரில் குடிக்கிறார்கள் தெரியுமா ?
பத்துநாட்களுக்கு முன் பெண்களுக்கான பெண்கள் மட்டும் மது அருந்தும் விடுதி மதுரையில் திறந்திருக்கிறார்கள். வெட்கமாக இல்லை? தாய்,தந்தை வயலில் உழைத்து பெண் பிள்ளையை பொறியியல் கல்லூரிக்கு அனுப்பினால் அவளோ இங்கு குடித்து சீரழிகிறாள். நான் காரில் போகும் போது ஒரு பெண் தனியாகப் போனால் இது யார் பெற்ற பிள்ளையோ? என்று கவலைப் படுகிறேன். அவளுக்கு என்ன ஆகப் போகிறதோ என்று பதற்றமாக இருக்கிறது.
இதுவா முன்னேற்றம்? எது நாகரிகம்? எது பெண்ணுரிமை ? எது பெண்ணியம்? எது சுதந்திரம்? இதுவா?.இந்தச் சமூகம் சீர்கெட்டு குட்டிச்சுவாராகி நரகமாகிவிட்டது திருமணமாகி 3 மாதங்களில் மணமுறிவு வருகிறது. திருமணமாகி 4 மாதங்களில் மணமுறிவு வருகிறது.
இந்தச் சமூக ஊடக சீரழிவு எல்லைதாண்டிப் போகிறது. பெண்களுக்கு எதிராக எவ்வளவு கொடுமைகள்.. இவை எல்லாம் பற்றி தன் நூலில் ஜாய் ஐசக் கவலைப் படுகிறார்.
அவருக்கு என் வாழ்த்துகள். ” என்றார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி , சகோதரர் மோகன் சி.லாசரஸ்  ஆகியோரும் பேசினார்கள்.முன்னதாக .சத்தியம் டிவி நிர்வாக இயக்குநர் ஐசக் லிவிங்ஸ்டன் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக  சத்தியம் டிவி இயக்குநர் ராபின் நன்றி கூறினார்.

More articles

Latest article