மும்பை:

பிஎன்பி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடி நிறுவன பெண் ஊழியர் கவிதா மணிக்கர் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்,‘‘சிபிஐ அதிகாரிகள் என்னை கடந்த மாதம் 20ம் தேதி இரவு 8 மணிக்கு கைது செய்தனர். சூரியன் மறைவுக்கு பின்னர் பெண்களை கைது செய்யக் கூடாது என்ற விதியை சிபிஐ மீறியுள்ளது. இது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும். இது அரசியலமைப்புக்கு எதிரானது. சட்ட விரோதமாக என்னை கைது செய்துள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவரது வக்கீல் விஜய் அகர்வால் தாக்கல் செய்தார். நீதிபதி சாம்ப்ரே முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார்.

இவருடன் சேர்த்து மொத்தம் 5 பேரை சிபிஐ கைது செய்தது. நிரவ் மோடியின் ஃபயர் ஸ்டார் டைமண்ட் நிறுவன தலைவர் விபுல் அம்பானியும் இதில் அடக்கம். கவிதா மணிக்கர் இன்று வரை சிபிஐ காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நிரவ் மோடியின் உதவியாளர் மற்றும் 3 நிறுவனங்களுக்கு கையெழுத்திடும் அதிகாரம் பெற்றவர். இவர் மோசடியாக புரிந்துணர்வு கடிதம் வழங்குவதற்கான விண்ணப்பங்களில் கையெழுத்திட்டுள்ளார் என சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஜனவரி 31ம் தேதி நிரவ் மோடி, அவரது மாமாவும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன உரிமையாளர் மெகுல் சோக்சி உள்பட பலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. ரூ. 280 கோடி மதிப்பில் 8 மோசடி பண பரிமாற்றங்கள் நடந்திருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

முதலாவது ஃஎப்ஐஆரில் ரூ. 6,498 கோடிக்கு மேல் நடந்த மோசடியில் 150 புரிந்துணர்வு கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 150 கடிதங்கள் மூலம் ரூ.4,886 கோடிக்கு கீதாஞ்சலி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது 2வது ஃஎப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சோக்சி மற்றும் அவரது கீதாஞ்சலி ஜெம்ஸ், நட்சத்திரா பிராண்ட்ஸ், கிலி ஆகிய நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என சிபிஐ தெரிவித்துள்ளது.