டெல்லி: கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்க முடியாது என  டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சமீப காலமாக பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி கோரி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கில், சிறையில் உள்ள அரசியல் கட்சியினர், தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் 2024 மக்களவைத் தேர்தலுக்கு வீடியோ கான்பரன்சிங்  மூலம் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறையை உருவாக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (இசிஐ) உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில்  வழக்கறிஞர் மாணவர் அமர்ஜித் குப்தா எனிபவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பிஎஸ் அரோரா  அமர்வு,  இது மிகவும் துணிச்சலான வேண்டு கோள், ஆனால், அதை ஏற்க முடியாது என்று கூறியதுடன், கைது செய்யப்பட்டு, விசாரணையில் இருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிப்பது என்பது சட்டத்துக்கு முரணானது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் கூறுகையில், “தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு அரசியல் தலைவர்களை கைது செய்யக்கூடாது என்று கூறினால் வன்புணர்வு, கொலை உள்ளிட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசியல் கட்சித் தொடங்க ஆரம்பித்து விடுவார்கள். இது கேலிக்கூத்தாகிவிடும். விசாரணையில் இருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிப்பது என்பது சட்டத்துக்கு முரணானது. தவிர, இது கொள்கை முடிவு சார்ந்த விவகாரம். இதில்  நீதிமன்றம் தலையிட முடியாது என கூறிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் மனுதாரர் ஏன் நீதிமன்றத்தை  அரசியலுக்குள் இழுக்கிறார் என கேள்வி எழுப்பினர்.

தேர்தலுக்காக  ஒருவர் அவரை (அரவிந்த் கெஜ்ரிவாலை? விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்கிறார். இன்னொருவர், அவரை விடுவிக்கக் கூடாது என்று மனுதாக்கல் செய்கிறார். கோர்ட்டு சட்ட முறைப்படியே செயல்படும். நாங்கள் அரசியலில் இருந்து விலகி இருக்க விரும்புகிறோம் என்று காட்டமாக தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.