ல்லடம்

னது காதல் கணவர் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்துவதாக ஒரு பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

 பல்லடம் கரைப்புதூர் ஊராட்சி அண்ணா நகரைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் ராஜா (வயது 24). பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி ராஜலட்சுமி நகரைச் சேர்ந்த பலசுப்பிரமணியத்தின் மகள் ரூபினி (24) இருவருக்கும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மலர்ந்தது.

இவர்கள் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.ஆனால்  இருவரும் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்குப் பெற்றோர் சம்மதிக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் ரூபினியின் அக்கா கணவர் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்த திருமணத்திற்குப் பின்னர் ராஜா சென்னை போரூரில் உள்ள தனியார் உடற்பயிற்சி  கூடத்தில் பயிற்சியாளராக வேலைக்கு சேர்ந்தார். பிறகு அவர் தனது காதல் மனைவி ரூபினியைச் சென்னைக்கு அழைத்துச் சென்று வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதமாக ரூபினியிடம் வரதட்சணை கேட்டு ராஜா அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ரூபினியின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து பல்லடம் கரைப்புதூரில் உள்ள அவரது வீட்டிற்கு ரூபினியை ராஜா அழைத்து வந்ததாகவும், அங்கு வைத்து கொடுமைப்படுத்தியதாககவும் கூறப்படுகிறது.

ராஜாவின் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு அவதூறாகப் பேசி சரமாரி தாக்கியதாகக் கூறப்படுகிறது. ரூபினி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்துபின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு அவசர தொலைப்பேசி எண் 100 மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் விரைந்து வந்து காயமடைந்த ரூபினியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இது குறித்து ரூபினி பல்லிடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தன்னை வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி கையை முறித்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரூபினி தெரிவித்துள்ளார். காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.