சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் தி.நகர் பேருந்து நிலையம் அருகில் இருந்து சௌத் வெஸ்ட் போக் ரோடு சந்திப்பு மற்றும் சி.ஐ.டி. 1வது மெயின் ரோடு வரை இணைப்பு மேம்பாலம் கட்டும் பணியை பெருநகர சென்னை மாநகராட்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது.

இந்த பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து தெற்கு உஸ்மான் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முதல் வரும் 13,07,2023 வரை ஒரு வாரகாலத்திற்கு சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையம் வரும் MTC பேருந்துகள் மற்றும் வாகனங்கள் தி.நகர் மேட்லி சந்திப்பு செல்வதற்கு கண்ணம்மாபேட்டை சந்திப்பில் இடது புறமாக திரும்பி புதியபோக் சாலை சென்று முத்துரங்கன் சாலை வழியாக வலது புறமாக திரும்பி முத்துரங்கன் சாலை மேட்லி சந்திப்பில் வலது புறமாக திரும்பி தி.நகர் பேருந்து நிலையம் உஸ்மான் சாலையை அடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்தும் அந்த வழியாகவும் சைதாப்பேட்டை செல்லும் பேருந்துகள் பர்கிட் சாலை வழியாக முப்பாரப்பன் சந்திப்பில் வலது புறமாக திரும்பி சி.ஐ.டி நகர் ரவுண்டானா அடைந்து இணைப்பு சாலை வழியாகவும் அல்லது 5 வது மெயின் ரோடு வழியாகவும் அண்ணா சாலையை அடையலாம்.

இதனால், மேட்லி சந்திப்பில் இருந்து மூப்பாரப்பன் சாலை வரையிலான பர்கிட் ரோடு ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் தி.நகர் பேருந்து நிலையம் மேட்லி ரோடு சந்திப்பில் வலது புறமாக திரும்பி மேட்லி சுரங்கபாதை வழியாக மேற்குமாம்பலம் மற்றும் மேற்கு சைதாபேட்டையை அடையலாம்.

வெங்கட் நாராயணா ரோடு JYM சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் தண்டபாணி தெருவில் இடது புறம் திரும்பி மூப்பாரப்பன் சாலை வழியாக அண்ணாசாலை CIT நகர் அடையலாம்.

வெங்கட்நாராயண சாலையில் இருந்து தி.நகர் செல்லும் வாகனங்கள் பர்கிட ரோடு மூப்பாரப்பன் சந்திப்பில் இடது புறம் திரும்பி மூசா தெரு வழியாக தி.நகர் அடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மெட்ரோ ரயில் பணி காரணமாக பனகல் பூங்கா, பாண்டி பஜார் மற்றும் தி.நகரை அடுத்த கோடம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில். இந்த புதிய இணைப்பு மேம்பாலம் அமைந்தவுடன் தி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.

இருந்தபோதும், இந்த புதிய போக்குவரத்து மாற்றத்தால் தி.நகர் வழியாக நந்தனம், மைலாப்பூர், கோட்டூர்புரம் செல்லும் வாகன ஓட்டிகள் எந்த வழியாக செல்வது என்று புரியாத புதிராக விழித்து வருகின்றனர்.