மகளிருக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.

மேலும், “பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் தமிழகத்தில் ஏழை எளியோர், நலிந்த பிரிவினர் மற்றும் மகளிருக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் பல்வேறு சமூக நீதித் திட்டங்களை செயல்படுத்தினர்.

அவர்கள் வழியில் திராவிட மாடல் ஆட்சியைத் தொடர்ந்து வரும் இந்த அரசு மகளிருக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை வழங்க முடிவெடுத்துள்ளது.

விளிம்பு நிலையில் உள்ள மகளிர் மற்றும் உழைக்கும் மகளிருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க இந்த திட்டம் வகை செய்யும்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் பயனாளிகளை பதிவு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு சுமார் ஒரு கோடி மகளிருக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது.

செப்டம்பர் 15 ம் தேதி அண்ணா பிறந்தநாளில் துவங்க இருக்கும் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடைகளில் அமைக்கப்பட உள்ள சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.