டில்லி,

காங்கிரஸ் இல்லாத இந்தியாவே கிடையாது, அதற்கு சாதியமே இல்லை என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.

மோடியின் பஞ்சாப் தேர்தல் பிரசாரகூட்ட பேச்சுக்கு, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கபில்சிபல் காட்டமாக பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள், அரசமைப்புச் சட்டத்தை அடிப்படையாக கொண்டவை; எனவே, காங்கிரஸ் இல்லாத இந்தியா ஒருபோதும் சாத்தியமல்ல’ என்று  தெரிவித்து உள்ளார்.

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 4ந்தேதி நடைபெற உள்ளது. அதன் காரணமாக, காங்கிரஸ், பா.ஜ. உள்ளிட்ட  மாநில தலைவர்களும் பஞ்சாபை முற்றுகையிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாபில் நடைபெற்ற பா.ஜ.வின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரசை கடுமையாக தாக்கி பேசினார் பிரதமர் மோடி.

அப்போது,  காங்கிரஸ் கட்சி பழங்கதையாகிவிட்டது, “காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற பிரசாரத்தை பாஜக முன்னெடுத்து வருகிறது என்று கூறினார்.

மோடியின் பேச்சு காங்கிரசாரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில் சிபில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அனைவரையும் உள்ளடக்கிய, மதச்சார்பற்ற இந்தியா என்பதே நமது அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளமாகும். அதனை அடிப்படையாக கொண்டதுதான், காங்கிரஸின் கொள்கைகள்.

எனவே, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது, மதச்சார்பின்மை, சகிப்புத் தன்மை, நல்லிணக்கம் ஆகியவை இல்லாத இந்தியாவைத்தான் குறிக்கும்.

தங்களது பிரித்தாளும் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாகவே, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற பிரசாரத்தை பாஜக மேற்கொண்டு வருகிறது.

அவர்கள் நினைப்பது, ஒருபோதும் நடக்காது என்றார் கபில் சிபல்.