டில்லி,

ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்காக ‛வாட்ஸ் அப்’ எண் வெளியிடப்பட்டது. ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் இதனை நேற்று அறிமுகப்படுத்தினார்.

காஷ்மீர் பகுதியில் ராணுவ எல்லையில் பாதுகாப்பு பணி செய்துவரும் எங்களுக்கு தரமற்ற உணவு கள் வழங்கப்படுவதாகவும்,  எங்களுக்கு அளிக்கப்படும் உணவு குறித்து, பிரதமர் மோடி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிபி.யாதவ் என்ற பிஎஸ்எப் வீரர் குற்றம்சாட்டி வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து மேலும் பல வீரர்கள் தங்களது குறைகளை சமூக வலைதளம் மூலம் பரப்ப தொடங்கினர்.

இதன் காரணமாக,  ராணுவ வீரர்கள் தங்கள் குறைகளை சமூகவலைதளங்களில் வெளியிடக் கூடாது என இந்திய ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத் எச்சரிக்கை விடுத்தார். மேலும் புகார் பெட்டியில் தங்களது குறைகளை எழுதி அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்காக ‛வாட்ஸ் அப்’ எண்ணை விபின் ராவத் அறிமுகப்படுத்தினார். தங்களது குறைகளை +91 9643300008 என்ற எண்ணுக்கு அனுப்பி, நிவாரணம் தேடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து,  போலீசாரும் தங்களது  குறைகளை தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்ணை வெளியிட கோரிக்கை வைத்து வருகின்றனர்.