குடகு:

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையால், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


இது தொடர்பாக துணை ஆணையர் ஆனீஸ் ஜாய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாழ்வதான இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கும் நிவாரண மையங்களுக்கும் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வியாழக்கிழமை முதல் குடகு மாவட்டத்தில் தொடர் மழை பெய்யும்
என அறிவித்துள்ளது.

மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் மாவட்ட அதிகாரிகள் ஈடுபடுவார்கள்.

நிலச்சரிவு ஏற்படும் என்று கருதப்படும் இடங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளான மடிக்கேரி, மங்களதேவி நகர், சாமுண்டீஸ்வரி நகர் மற்றும் இந்திரா நகர் பகுதிகளில் உள்ள மக்களை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு வீட்டு வாடகை வழங்கப்படும்.

நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ள இடங்களில் லைஃப் ஜாக்கெட்கள், மழை கோட்டுகள் மற்றும் தார்ப்பாலின் வழங்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.