டாக்கா: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வெற்றியை நோக்கி நடைபோடுகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. இன்று கடைசிநாள் ஆட்டம் நடைபெற்றுவரும் நிலையில், 48.1 ஓவர்களில், 173 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அந்த அணியின் கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன.

வங்கசேத அணி, முதல் இன்னிங்ஸில் 430 ரன்களை எடுக்க, விண்டீஸ் எடுத்தது 259 ரன்கள். பின்னர், இரண்டாம் இன்னிங்ஸில் 223 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த வங்கதேசம்இ விண்டீஸ் அணிக்கு 395 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய விண்டீஸ் அணியில், முதல் மூன்று வீரர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவகையில் ஆடவில்லை. ஆனால், நான்காவது மற்றும் ஐந்தாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த நிக்ருமா பானரும், கைல் மேயரும் ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டனர்.

வங்கதேச பந்து வீச்சாளர்களுக்கு ஆட்டம் காட்டும் அவர்கள், தங்கள் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று கொண்டுள்ளார்கள். 194 பந்துகளை சந்தித்துள்ள பானர், 7 பவுண்டரிகளுடன் 61 ரன்களை அடித்துள்ளார்.

மொத்தம் 183 பந்துகளை சந்தித்துள்ள மேயர்ஸ், 1 சிக்ஸர் & 12 பவுண்டரிகளுடன் 107 ரன்களை அடித்து களத்தில் உள்ளார். இவர்கள் இருவரும், குறைந்தபட்சம் இன்னும் 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைக்கும்பட்சத்தில், விண்டீஸ் அணி வெல்வது உறுதி என்றே நம்பப்படுகிறது.

தற்போதைய நிலையில், விண்டீஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து, 231 ரன்களை எடுத்துள்ளது. வங்கதேச அணியின் தரப்பில், மெஹ்தி ஹசனுக்கு மட்டுமே இதுவரை 3 விக்கெட்டுகள் கிடைத்துள்ளன.