சென்னை:

மிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுக்கப்பட்ட வரும் நடவடிக்கைகளை என்ன என்பது குறித்து,  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவாமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் பொது சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய் நிர்வாகத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளும் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளன.

இதுவரை 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 5 பேர் பலியான நிலையில், 7 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளிக் காட்சி மூலம், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓபிஎஸ்,, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் உயரதிகாரிகள் இருந்தனர்.

இந்த ஆலோசனையின்போது, மாவட்ட கலெக்டர்களிடம் பேசிய முதல்வர், ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தியதாகவும், நோய் தொற்று பரவாமல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், ஊரடங்கு நீட்டிப்பு முடிவை மத்திய அரசு எடுக்கும்பட்சத்தில், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கு ஏப்ரல் 14க்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.