சென்னை:

கொரோனாவுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், அது நீக்கப்படும் வரை பள்ளிவாசல்களில் தொழுகை வேண்டாம் என்று, இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 21 நாட்கள் லாக்டவுன் போடப்பட்டு உள்ளது. வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், மக்கள் ஒரே இடத்தில் கூடக்கூடாது என்றும், வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. மேலும் ஒருவொருக்கொருவர் 1 மீட்டர் இடைவெளி (சமூக விலகல்) அவசியம் கடைபிடிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

ஆனால், அரசின் உத்தரவை மீறி பல பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் தொழுகை மேற்கொண்டு வருகின்றனர். இதை காவல்துறையினரும், சுகாதாரத்துறையினரும் கண்டித்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அலுவலகத்தில் ஜமாஅத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் கொரோனா அவசர உதவி குறித்த ஆலோசனைக்கூட்டம்  நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்  காதர் மொகிதீன், தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், எஸ்டிபிஐ பொதுச்செயலாளர் அச. உமர் பாரூக், தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் நெல்லை அமீன் மற்றும் கோடம்பாக்கம் ஜமாலுத்தீன், ஜமாஅத்துல் உலமா பொதுச்செயலாளர்  அன்வர் பாதுஷா உலவி, துணைப்பொதுச் செயலாளர் மௌலவி. இல்யாஸ் ரியாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்கள் சமூக விலகல் கடைபிடித்து ஆலோசனை நடத்தினர்.  அதைத்தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், கூறப்பட்டிருப்பதாவது,

நமது வாழ்நாளில் இதுவரை காணாத கொடிய கொரோனா நோய் கிருமி முழு உலகத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நமது சமூக மக்கள் அனைவரும் தொடர்ந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் பல்வேறு சமுதாய இயக்கங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடைபெறுவதில்லை. இதே நிலை முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை தொடர வேண்டுமென்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளையும் மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனா அவசர நிலையில் முழு அற்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கொரோனா எதிரொலியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் மருத்துவர்கள் உள்பட அனைத்து அரசு துறையினருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனா தொடர்பாக தமிழக அரசு நல்வாழ்வு துறையின் சார்பாக வீடுதோறும் நடைபெறும் ஆய்வுக்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு வலியுறுத்துகிறது.

கொரோனா நோய், அதன் பரவல், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் முதலியவை பற்றி சமூக வளைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றது. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அனைத்தும் நம்பகத்தன்மை உடையது அல்ல. எனவே கேட்டதையெல்லாம் ஆய்வில்லாமல் பரப்புவது ஒரு முஸ்லீமின் பண்பு அல்ல. இந்த அடிப்படையில் சமூக வலைத்தளங்களில் வருபவை அனைத்தையும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனாவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்படும் நிலையில் உள்ளவர்கள் தாங்கள் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பாமல் கீழே கையொப்பமிட்டுள்ள அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற 7373736085 என்ற கொரோனா அவசர உதவி மையத்தின் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த எண்ணில் பதிவு செய்யும் தகவல்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இடர்பாடுகள் நீக்கப்பட வழி வகை காண்பதற்கு இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விட்டனர்.

இதில் கொரோனா தொற்று உள்ளது என்று பரிசோதனையில் அறியப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தங்களை மருத்துவ பரிசோதனைக்கும் தனிமைப்படுத்துதலுக்கும் உட்படுத்தி வருகின்றனர்.

இச்சூழலில் பல்வேறு மாவட்டங்களில் அம்மாவட்ட ஆட்சியர்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மூலம் கண்ணிய மாக எவ்வித பதட்டத்திற்கும் வழிவகுக்காமல் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் பணியினை திறம்பட மேற்கொண்டு வருகின்றனர்.

இதே சிறப்பான வழிமுறையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

சில அரசு மருத்துவமனைகளில் சரியான குடிநீர் வசதி செய்துக் கொடுக்கப்படவில்லை என்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது என்றும் கைதிகளை போல் எங்களை அடைத்து வைத்துள்ளனர் என்றும் புகார்கள் வந்துள்ளதை வருத்தத்துடன் பதிவுச் செய்கிறோம்.

மருத்துவ பரிசோதனையில் கொரோவினால் பாதிக்கப்பட்டவர் என்று அறியப்பட்டவர்களும், பாதிக்கப்படாதவர் களும் ஒரே இடத்தில் சமூக இடைவெளியின்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது அவர்களிடையே பீதியையும் பதட்டதையும் ஏற்படுத்தியுள்ளது.

இதே போல், ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பது பெண்களுக்கு மிக பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சில மருத்துவமனைகளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும் புகார் வந்துள்ளது.

இந்த மோசமான அவல நிலை போர்கால அடிப்படையில் நீக்கப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டவர்களுக்கு பரிசோதனை அறிக்கை அளிக்கப்படுவதில்லை. இது அவர்களுக்கு மிக பெரும் மன உளைச்சலை அளித்து வருகின்றது.

இதே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் சமூக வலைத்தளங்களில் கசிய விடப்படுகிறது. இது மருத்துவ அறத்திற்கும் மனிதநேயத்திற்கும் முரணானதாகும்.

அரசு இந்த விவகாரத்தில் வெளிப்படையாக நடந்துக் கொள்ளவில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த குறையை நீக்கும் வகையில் பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனையின் முடிவுகள் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் ஒரு பகுதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர் உள்ளார் என்ற தகவல் அங்குள்ள உள்ளாட்சி மற்றும் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் தேவையற்ற பதட்டத்தை அப்பகுதியில் ஏற்படுத்துகின்றது.

இந்த நிலையை நீக்குவதற்கும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரங்கள் மீது புகாரின் அடிப்படையில் சிலர் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதே நேரத்தில் சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வெறுப்பு பரப்புரை செய்வோர் மீது மேலும் தீவிரமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.