காந்திநகர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். ராகுல் காந்தி மீது குஜராத் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர். பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ராகுல் காந்திக்கு இந்த வழக்கில் சூரத் பெருநகர நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததையொட்டி அவர் தனது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். அவர் அதை எதிர்த்து சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்டுஅவதூறு வழக்குத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரி மனுத் தாக்கல் செய்தார்.

அவருக்கு ஜாமீன் வழங்கிய செசன்ஸ் நீதிமன்றம், தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.  பிறகு ராகுல்காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடினார்.  இந்த வழக்கில் கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்குத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடைக்கால விடுமுறைக்குப்பின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று வெளியிட்ட வழக்கு அட்டவணையின்படி, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணிக்குத் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த அவதூறு வழக்குத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டால், ராகுல் காந்தி மீண்டும் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை திரும்பப்பெறும் வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.