ரஜினி பட வெளியீட்டுத் தேதி நெருங்க நெருங் பரபரப்புதான். அவர் தூத்துக்குடி சென்றதுகூட, விரைவில் வெளியாக இருக்கும் தனது காலா படத்தின் பிரமோஷனுக்காகத்தான் என்ற விமர்சனம் (வழக்கம்போல) எழுந்திருக்கிறது.

இதற்கிடையே, கர்நாடகத்தில் காலா படத்துக்கு தடை விதிப்பதாக அம்மாநில பிலிம் சேம்பர் அறிவித்திருக்கிறது. கன்னட வெறியரான வாட்டாள் நாகராஜூம், “காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக பேசும் ரஜினியின் காலா படத்தை வெளியிடவிடமாட்டோம்” என்று பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் “தமிழகத்திலும் காலாவுக்கு தடையா” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகிவரும் பேனர் ஒன்று.

“மக்கள் அதிகாரம்” அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த பேனரில், “தூத்துக்குடி தமிழர்களை சமூகவிரோதி என்ற ரஜினியின் காலா படத்தை அனுமதிக்கலாமா?” என்று கேட்கப்பட்டிருக்கிறது.

இந்த மக்கள் அதிகாரம் அமைப்பு, ம.க.இ.க. எனும் இடதுசாரி அமைப்பின் கிளை அமைப்பாகும். மக்கள் நல போராட்டங்களில் வீரியமுடன் செயல்படக்கூடிய அமைப்பு இது. கருவறை நுழைவு, இந்தி எதிர்ப்பு என்று தொடர்ந்து பல போராட்டங்களை செய்துவரும் அமைப்பு இது.

அரசுக்கு எதிராக.. அதாவது, டாஸ்மாக்குக்கு எதிராக பாடியதால் கைது செய்யப்பட்ட பாடகர் கோவன், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்தான். மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஜெயராமன், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் ஒருவர்.

இந்த நிலையில்தான், “தூத்துக்குடி தமிழர்களை சமூகவிரோதி என்ற ரஜினியின் காலா படத்தை அனுமதிக்கலாமா” என்று மக்கள் அதிகாரம் பரப்புரையை ஆரம்பித்திருக்கிறது.

ஆகவே காலாவுக்கு தடை கோரி இந்த அமைப்பு களம் இறங்கி  போராடுமோ என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டு பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

இந்த மக்கள் அதிகாரம் அமைப்பினரை தொடர்புகொண்டு பேசினோம். அவர்கள், “காலா படத்துக்காக எல்லாம் களத்தில் இறங்கி போராட நாங்கள் திட்டமிடவில்லை. நடிகர் ரஜினிகாந்த், கார்பரேட்டுகளின் கைக்கூலியாக, அதிகார வர்க்கத்தின் கையாளாக செல்பட்டு வருகிறார். வருங்கால சந்ததியினருக்காக தங்கள் உயிரைக்கொடுத்து போராடிய தூத்துக்குடி தமிழர்களை சமூகவிரோதிகள் என்கிறார். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே காலா படத்துக்கு எதிரான பேனர்களை வெளியிடுகிறோம். மற்றபடி களத்தில் இறங்கி போராடும் எண்ணம் இல்லை” என்றார்கள்.