டில்லி:

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், ‘ ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதற்கு எதிராக ஆலை நிர்வாகம் மனுதாக்கல் செய்தால் தமிழக அரசின் வாதங்களை கேட்டபின்தான்  எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

உயிர்க்கொல்லி நோய்களான புற்றுநோய், கிட்னி பாதிப்பு, மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு நோய்களை உருவாக்கி வரும் ஸ்டெர் லைட்டுக்கு எதிராக அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். தற்போது நோயின் பாதிப்புகள் வலுவடைந்து வந்ததை தொடர்ந்து கடந்த 100 நாட்களாக பொதுமக்கள் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.

கடந்த 22ந்தேதி நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்து, போலீசார் மிருகத்தனமாக பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ஆலையை நிரந்தரமாக மூடுவதாக  தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, ஆலைக்கும் சீல் வைத்துள்ளது.

ஆனால், ஸ்டெர்லைட் நிர்வாகம், சட்டப்படி நீதிமன்ற உத்தரவு பெற்று ஆலையை மீண்டும் நடத்துவோம் என்று கொக்கரித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து,  ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தால் தமிழக அரசின் கருத்துகளை கேட்காமல் முடிவெடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்  செய்துள்ளது.