கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி, தற்போது அரையிறுதிக்குள் நுழைய முடியுமா? என்ற பரிதாபமான நிலையில் வந்து நின்றுள்ளது.

சொந்த மண் மற்றும் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்கள் என்று கெத்தாக தனது உலகக்கோப்பை பயணத்தை துவக்கியது இங்கிலாந்து. ஆனால், நடந்ததோ வேறு. பாகிஸ்தான் அணியிடம் எதிர்பாராமல் தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி. அதில்கூட பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால், மிகவும் பலவீனமான அணியாக இருக்கும் இலங்கையிடம், வெறும் 232 ரன்களை எடுக்க முடியாமல் திணறிப்போய் தோற்றபோதுதான் இங்கிலாந்து இனி வேலைக்கு ஆகுமா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. அவ்வளவுதான், அந்த அணிக்கான வாய்ப்புகள் அப்போதே சிக்கலாக தொடங்கியது.

ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 3 வலுவான அணிகளுக்கு எதிரான போட்டிகள் அனைத்திலும் வென்றாக வேண்டிய நெருக்கடி இருந்த நிலையில், ஆஸ்திரேலியாவிடம் தோற்றுவிட்டது. இனி மிச்சமிருப்பது 2 ஆட்டங்கள் மட்டுமே. அந்த இரண்டிலும் வென்றால்தான் வாய்ப்பை உறுதிசெய்ய முடியும்.

ஆனால், உலகக்கோப்பை போட்டிகளில் கடந்த 27 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை இங்கிலாந்து வென்றதில்லை. எனவே, அந்த மோசமான ராசியை இங்கிலாந்து இந்தமுறை போராடி மாற்றுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது 8 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது இங்கிலாந்து.