லண்டன்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் மிகவும் மோசமாக செயல்பட்டதால், கடும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணி, தற்போது தொடர்ந்து மூன்றாவது நாளாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜுன் 27ம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் மோதவுள்ளது இந்திய அணி. பாகிஸ்தான் அணியுடனான போட்டி முடிந்ததும், ஏதோ உலகக்கோப்பையை வென்றுவிட்டது போன்று, குடும்பத்தினருடன் ஜாலியாக பொழுதைக் கழித்து, பயிற்சியை சுத்தமாக மறந்தனர் இந்திய வீரர்கள்.

பாகிஸ்தானை வென்றால் போதும், வேறு எதுவும் தேவையில்லை என்பதுபோன்று நடந்துகொண்டது இந்திய கிரிக்கெட் நிர்வாகம். ஆனால், ஆஃப்கானிஸ்தானுடன் நடந்த போட்டியில் இந்திய அணியின் திறமை பல் இளித்ததால் கடும் விமர்சனங்கள் கிளம்பின.

இதையடுத்து, தற்போது தொடர்ந்து மூன்றாவது நாளாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்திய அணி. ஏனெனில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் சற்றே சுதாரித்து சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இப்போட்டியில், ஷாட் பிட்ச் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளும் தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.