சிம்லா:

பிரதமர் மோடியை நோக்கி விரல்களை நீட்டி பேசினால், அவர்களின் கைகள் வெட்டப்படும் என்று இமாச்சல மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் மிரட்டி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே 3 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 4 கட்ட தேர்தலுக்கான  தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ராகுல்காந்தி பிரதமர் மோடி குறித்து வரம்பு மீறி பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டியவர்,மோடியை திருடன் என சொல்லும் ராகுல் காந்தியை, அவரது தாய் சோனியா காந்தியை, அவரது மச்சான் ஆகியோரை பிணையில் வராத முடியாத அளவுக்கு ஜெயிலில் போடவேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, அவர் இரண்டு நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் சத்பால் சிங் சத்தி மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அப்போது பிரதமர் மோடியை எதிர்த்து யாராவது விரல்களை நீட்டி பேசினால், அவர்களின் கைககள் துண்டிக்கப்படும் என ஆவேசமாக தெரிவித்தார்.

சத்பால் சிங் சத்தியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து மீண்டும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.