ஒன்றிய அரசு என சொல்வது ஏன்? சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…

Must read

சென்னை: ஒன்றிய அரசு என சொல்வது ஏன்? என்பது குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.  ஒன்றிய அரசு என சொல்வதை சமூக குற்றம் என கருதவேண்டாம் தெரிவித்துள்ளார்.

தமிழக 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் உரையுடன்  தொடங்கியது. 24ந்தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தொடரில் நேற்று முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று 2வது நாளாக  விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. அனைத்து கட்சித் தலைவர்களும் பேசி முடித்த பின்பு, 24-ஆம் தேதி விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிலளித்து உரையாற்றவுள்ளார்.

இன்றைய கூட்டத்தொடரில், ஆளுநர் உரை மீது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ”தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசை ஏன் ஒன்றிய அரசு என அழைக்கிறீர்கள்.அதற்கான விளக்கம் வேண்டும்”, கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் தெரிவித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,

“பேரவைத் தலைவர் அவர்களே, ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, “இந்தியா, அதாவது பாரதம் – மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்” என்றுதான் உள்ளது. India, that is Bharat, shall be a Union of States” என்றுதான் இருக்கிறது. அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை.

‘ஒன்றியம்’ என்பது தவறான சொல் அல்ல, ‘மாநிலங்கள் ஒன்றுசேர்ந்தது’ என்பதுதான் அதனுடைய பொருள். இன்னும் சிலர் அண்ணா சொல்லாததை, எங்கள் தலைவர் கருணாநிதி சொல்லாததை நாங்கள் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டு, அதை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

திமுகவினுடைய 1957ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே ‘இந்திய யூனியன்’ என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. 1963 ஜனவரி 25, நாடாளுமன்ற மாநிலங்களவையில், அண்ணா பேசுகிறபோது, குறிப்பிட்டார். “அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது, பொதுமக்களிடம் நிலைத்துள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.

சட்டம் சார்ந்த இறைமையானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங்களுக்கும் இடையே – அதாவது மாநிலங்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளது” என்றுதான் அண்ணா பேசியிருக்கிறார்.

‘சமஷ்டி’ என்ற வார்த்தையை ம.பொ.சி. பயன்படுத்தியிருக்கிறார். ‘வெளியேறுக மிகுதியான அதிகாரக் குவிப்பு – வருக உண்மையான கூட்டாட்சி’ என்று ராஜாஜியே எழுதியிருக்கிறார்.

எனவே, ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம், பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டேயிருப்போம்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்

 

More articles

Latest article