சசிகலாவுடன் துணைவேந்தர்கள் சந்திப்பு புகைப்படம்

சென்னை,
சிகலாவை சந்தித்தது ஏன்? என்று விளக்கம் கேட்டு துணைவேந்தர்களுக்கு கவர்னர் மாளிகை கிடுக்கிபிடி போட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டாக சென்று சசிகலாவை சந்தித்தனர். அதுகுறித்து விளக்கம் கோருகிறது கவர்னர் அலுவலகம்
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்க துடித்து வருகிறார். அதற்காக அவருக்கு விசுவாசமான கட்சியினரை யும், அரசு அதிகாரிகளையும் நேரில் வரவழைத்து பேசி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழக டிஜிபி, கமிஷனர்,  தமிழக முன்னாள் தலைமை செயலாளர் உள்பட அரசு உயர்அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சசிகலாவை போயஸ் தோட்ட இல்லத்துக்கு  சென்று சந்தித்து வந்தனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து  பல்கலைக்கழக துணை வேந்தர்கள்  கடந்த வாரம் போயஸ் கார்டனுக்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசினார்கள்.
இந்த சந்திப்பு பொதுமக்களிடையேயும், அரசியல் கட்சியினரிடையேயும் கடும் விமர்சனத்தை உருவாக்கியது. இதுகுறித்த சர்ச்சை விமர்சனங்கள் சமூக வலைதளங்களில்  வைரலாக பரவி வருகிறது.
அரசு பதவியில் இல்லாத ஒருவரை, அரசு உயர் அதிகாரிகள் எப்படி சென்று சந்திக்கலாம் என கேள்வி எழும்பியது. அரசின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சசிகலாவை சந்தித்து பேசியது கண்டனத்துக்குறியது என்று விமர்சிக்கப்பட்டது.
இதுகுறித்து,  சசிகலாவை சந்தித்த துணைவேந்தர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு கடிதம் எழுதினார். பல்வேறு தமிழக அரசியல் கட்சிகளும் துணை வேந்தர்களின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தன.
இதன் காரணமாக தமிழக கவர்னர் மாளிகை  தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.  தமிழக உயர்கல்வித்துறையிடம் கவர்னர் அலுவலகம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், சசிகலாவை சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் விளக்கம் கேட்டு கவர்னர் அலுவலகத்தில் இருந்து கடிதம் சென்றுள்ளது.
இது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சசிகலாவை சந்தித்த துணைவேந்தர்கள் விவரம்:-
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி,
கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி,
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.எம்.மூர்த்தி,
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன்
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன்,
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி,
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளி,
அம்பேத்கர் பல்கலைகழக துணைவேந்தர் வணங்காமுடி,
அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கணேசன்.
பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் முருகன்,
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் 
இது குறித்து உயர்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அரசு பணியில் இல்லாத ஒருவரை சந்தித்தது,  பல்கலைக்கழக விதிகளுக்கும் இறையான்மைக்கும் எதிரானது. பல்கலைக்கழகங்களில் உள்ள துணை வேந்தர்கள் எந்த அரசியல் கட்சியும் சாராத நடுநிலையாளர்களாக இருக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் அனைவரும் சென்று அரசியல் சார்பாக ஒரு கருத்தை தெரிவித்து விட்டு வந்துள்ளனர். அரசு ஊழியர்கள் அரசியல் சார்ந்த கருத்தை தெரிவித்தால் பணியில் இருந்து நீக்கம் செய்யலாம் என்று விதி இருக்கிறது.
இதன் காரணமாக அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்