சென்னை: முதல்வர் விஜயின் பயிர்க்கடன் அறிவிப்பு விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தற்போதைய பாரபட்சமான கடன் தள்ளுபடி அறிவிப்பு என்பது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் செய்யும் துரோகமாகும். இது தவெக மீது மக்கள் வைத்துள்ள ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சீர்குலைத்துவிடும் என்று பதிவிட்டுள்ளார்

தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் உழவர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவருமான அருள் ஆறுமுகம் தவெக தலைமைக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டவர் உழவர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் அருள் ஆறுமுகம். தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம், விவசாயிகளை ஏமாற்றும் வகையில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“வாக்குறுதி அல்ல.. நீங்கள் தந்தது உத்தரவாதம்!”
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:”முதலமைச்சர் விஜய் அவர்களே… நீங்கள் தேர்தலின் போது விவசாயிகளுக்கு வாக்குறுதி தரவில்லை, மாறாக ‘உத்தரவாதம்’ கொடுத்தீர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. தற்போதைய பாரபட்சமான கடன் தள்ளுபடி அறிவிப்பு என்பது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் செய்யும் துரோகமாகும். இது தவெக மீது மக்கள் வைத்துள்ள ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சீர்குலைத்துவிடும்.”
சிறு மற்றும் குறு விவசாயிகளின் ஒட்டுமொத்தக் கடன்களையும் உடனடியாக நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். நடுத்தர மற்றும் பெரு விவசாயிகளுக்குக் குறைந்தபட்சம் 50% கடன் தள்ளுபடியாவது வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
“உங்களுக்கு விவசாயத்தைப் பற்றி முழுமையாகத் தெரியாது. கள யதார்த்தம் புரியாத ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இதுபோன்ற தவறான முடிவுகளை அரசு எடுக்கக் கூடாது” என்றும் அவர் சாடியுள்ளார்.
தமிழக அரசிடம் தற்போது போதிய நிதி இல்லை என்றால், அதற்கேற்ப திட்டமிட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ள அவர், “நிதிப் பற்றாக்குறை இருந்தால், தேர்தல் வாக்குறுதிப்படி ஒட்டுமொத்தத் தள்ளுபடியை முதலில் அறிவித்துவிட்டு, பின்னர் தேதி வாரியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக (Phases) நிதியை விடுவித்து விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கலாம். அதை விடுத்து, தற்போதைய அரைகுறை அறிவிப்பு விவசாயிகளிடம் தவெக அரசு மீது பெரும் எதிர்மறை எண்ணத்தையே உருவாக்கும்” என எச்சரித்துள்ளார்.
[youtube-feed feed=1]