சென்னை: சிபிஎஸ்இ பள்ளியில் மும்மொழி கல்வி கட்டாயம்  என்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு மாநில பாஜக முன்னாள் மாநில தலைவர்  அண்ணாமலை எதிர்ப்பு  தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ பள்ளியில் இந்த ஆண்டு முதலே 9ம்வகுப்பில் இருந்து மும்மொழி கட்டாயமாக்கப்பட்டிருப்பது,  குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என மத்திய பாஜக அரசுக்கு எதிராக அண்ணாமலை:  முதல் முறையாக குரல் எழுப்பி உள்ளார். இதனால் பாஜவினர் கடும் அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையின் சமூக வலைத்தள பதிவில்,  கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.

குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது.

இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, CBSE அமைப்பு மீறியிருக்கிறது. CBSE அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும். எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]