டில்லி

ன்று நடந்த பிரதமர் மோடியைச் சந்தித்தது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் திருணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது.  பிரதமர் மோடியையும் பாஜகவையும் அக்கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்தார்.  அதையொட்டி பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது.  தேர்தலில் திருணாமுல் வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.

தேர்தலுக்கு பிறகும் மாநிலத்தில் வன்முறை தொடர்ந்தது.   அதைக் கண்டித்த மேற்கு வங்க ஆளுநருடனும் மம்தா பானர்ஜி மோதல் போக்குடன் நடந்து வருகிறார்.  மேற்கு வங்கத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களை கான வந்த மோடியை மம்தா 30 நிமிட நேரம் காக்க வைத்ததாகக் குற்றச்சாட்டு நிலவியது.  இதையொட்டி மத்திய அரசு பதவி நீக்கம் செய்த மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலரை மீண்டும் மம்தா வேறு பதவியில் அமர்த்தியது மேலும் மோதலை அதிகரித்தது.

இன்று டில்லி சென்ற மம்தா பானர்ஜி மோடியைச் சந்தித்தது பரபரப்பை உண்டாக்கி உ ள்ளது.  வழக்கமாக மாநில முதல்வர் மற்றும் பிரதமர் சந்திப்பது சாதாரணமாகக் கருதப்பட்டாலும் இந்த சந்திப்பைப் பலரும் உற்று நோக்கி உள்ளனர்.   இந்த சந்திப்பு முடிந்த பிறகு மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி உள்ளார்.

அப்போது மம்தா பானர்ஜி, “இன்று மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு ஆகும்.  அப்போது கொரோனாவின் தற்போதைய நிலை, தடுப்பூசிகள் , மற்றும் மருந்து தேவகள் பற்றி எடுத்துரைத்தேன்.  நிலுவையில் உள்ள மாநில பெயர் மாற்றம் உள்ளிட்ட திட்டங்கள் பற்றியும் பிரதமரிடம் பேசி உள்ளேன்.   ஆனால் அவருடன் மேற்கு வங்க தேர்தல் குறித்து பேசவில்லை.” எனத் தெரிவித்தார்.

மேலும் மம்தா பானர்ஜி, “சமீபத்தில் நடந்துள்ள பெகாசஸ் ஒட்டுக் கேட்பு குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப்  பிரதமர் மோடி அழைப்பு விடுக்க வேண்டும்.  அத்துடன் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்” எனக் கூறி உள்ளார்.