30 நாட்களாகியும் பஹல்காம் தாக்குதல் தொடர்புடைய பயங்கரவாதிகள் குறித்த துப்பு கூட கிடைக்காதது ஏன் ? என்பது தொடர்பாக டைனிக் பாஸ்கர் நாளிதழ் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் மாவட்டம் பைசரனில் ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

பைசரனை ஒட்டிய காட்டுப் பகுதிக்குள் இருந்து வந்த மூன்று தீவிரவாதிகள் சுமார் 15 நிமிட நேரம் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் அதே காட்டுப் பகுதி வழியாக அவர்கள் சென்று மறைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பஹல்காம் காவல்நிலையத்தில் அன்று மதியமே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இதன் பின்னர், ஏப்ரல் 23 அன்று அனந்த்நாக் காவல்துறை ஒரு சுவரொட்டியை வெளியிட்டது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தகவல் அளிப்பவருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று எழுதப்பட்டிருந்தது.

அடுத்த நாள், ஏப்ரல் 24 அன்று, அனந்த்நாக் காவல்துறை 3 ஓவியங்களை வெளியிட்டது. அதில் அனந்த்நாக்கைச் சேர்ந்த அடில் உசேன் தோகர், ஹாஷிம் மூசா என்கிற சுலேமான் மற்றும் அலி என்கிற தல்ஹா பாய் ஆகிய மூன்று பயங்கரவாதிகளின் பெயர்கள் இருந்தன. மூவரைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் தனி வெகுமதி அறிவிக்கப்பட்டது. மூசாவும் அலியும் பாகிஸ்தானியர்கள். பாகிஸ்தானின் சிறப்பு சேவை குழுவில் மூசா ஒரு கமாண்டோவாக இருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த ஓவியத்துடன் ஒரு புகைப்படமும் வெளியிடப்பட்டது. இதில், 4 பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டில் துப்பாக்கிகளுடன் நிற்கிறார்கள். இவர்களில் ஹாஷிம் மூசா மற்றும் ஜுனைத் அகமது பட் ஆகியோரும் அடங்குவர்.

அக்டோபர் 20, 2024 அன்று சோனாமார்க்கில் உள்ள இசட்-மோர் சுரங்கப்பாதையில் நடந்த தாக்குதலில் ஜுனைத் ஈடுபட்டார்.

டிசம்பர் 2024 இல் டச்சிகாம் காடுகளில் பாதுகாப்புப் படையினரால் ஜுனைத் கொல்லப்பட்ட நிலையில் அவரது மொபைலில் இருந்து இந்தப் புகைப்படம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிரவாதிகள் குறித்து 2024 டிசம்பர் முதலே காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்துள்ளனர்.

அதேவேளையில், தாக்குதலுக்கு மறுநாளான ஏப்ரல் 23 அன்று, தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) குழு சம்பவ இடத்தை அடைந்தது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஏப்ரல் 27 முதல் NIA இந்த வழக்கை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. NIA தலைவர் சதானந்த் டேட் இந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர், 113 பேர் கைது செய்யப்பட்டனர், ஆனால் அடில், மூசா மற்றும் அலி குறித்த எந்த துப்பும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

மேலும், ஜிப் லைன் ஆபரேட்டர்கள், குதிரை உரிமையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரை தினமும் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் சிலர் ‘பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் பயங்கரவாதி அலி என்கிற தல்ஹாவை அடையாளம் கண்டுள்ளனர்’ என்று கூறப்படுகிறது.

இருப்பினும், இதுவரை அவர்களின் இருப்பிடம் குறித்த எந்தவொரு தகவலும் விசாரணை அமைப்பினருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், இவர்கள் இங்குள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் தங்காமல் மலைப் பகுதியில் உள்ள காடுகள் மற்றும் குகைகளில் ஒளிந்திருக்கக்கூடும் என்றும் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவற்றை 2 அல்லது 3 பேர் மட்டுமே வழங்கி வருவதாகவும் அதனால் அவர்களின் இருப்பிடம் குறித்து யாருக்கும் தெரியவில்லை என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளையில், அனந்த்நாக் காவல்துறை வெளியிட்ட அடில் உசேன் தோகர், ஹாஷிம் மூசா என்கிற சுலேமான் மற்றும் அலி என்கிற தல்ஹா பாய் ஆகிய மூன்று தீவிரவாதிகள் அல்லாமல் வேறு யாராவது இதில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளதா என்ற கோணத்திலும் NIA தனது விசாரணையை மேற்கொண்டு வருவதாக டைனிக் பாஸ்கர் குறிப்பிட்டுள்ளது.

இருந்தபோதும் நாட்டையே உலுக்கிய பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்புடைய தீவிரவாதிகள் குறித்து இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது.