நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தனக்கு வழங்கப்பட்ட டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்தார்.

இந்த நிலையில் ஜூன் 4 ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருக்கும் ராகுல் காந்தி தனக்கு சாதாரண பாஸ்போர்ட் வழங்க விண்ணப்பித்திருந்தார்.

இதனை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தை நாடிய சுப்பிரமணியம் சுவாமி புதிய பாஸ்போர்ட் வழங்கக் கூடாது என்றும் அவர் வெளிநாடு சென்றால் தான் தொடர்ந்த நேஷனல் ஹெரால்ட் வழக்கில் இருந்து தப்பிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வார் என்று குறிப்பிட்டிருந்தார்.

சு. சாமியின் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 2012 ம் ஆண்டு சு.சாமி அளித்த புகாரை ஆதாரமாகக் கொண்டு அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக போடப்பட்ட இந்த வழக்கு 2018 ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது.

பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில் இந்த இடைப்பட்ட காலத்தில் ராகுல் காந்தி பலமுறை வெளிநாடு சென்று வந்துள்ளார், அப்போதெல்லாம் ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில் தற்போது மட்டும் சந்தேகம் வரக்காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், எந்தவொரு தனி நபரும் தான் விரும்பிய இடத்திற்கு பயணம் செய்ய உரிமை உண்டு இது அவரது அடிப்படை உரிமையில் தலையிடுவதாக உள்ளது என்றும் இது விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் கூறி அந்த மனுவை நிராகரித்தனர்.