டில்லி:

எம்.பி., எம்எல்ஏ.க்களின் சொத்துக்கள் அதிகரித்திருப்பது குறித்து தன்னார்வலர் லோக் பிரஹ்ரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது.

அப்போது நீதிபதிகள் செல்லமேஸ்வர், அப்துல் நசீர் ஆகியோர் கூறுகையில், ‘‘எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கான ஊதியம், சலுகைகளை அவர்களே நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்கலாமா?. அதனால் ஊதியம், படி போன்றவற்றை நிர்ணயம் செய்ய நிலையான, சுதந்திரமான ஒரு முறையை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்’’ என்றனர்

இந்த விவாதத்தின் போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ஒரு விஷயத்தை இது கொள்கை முடிவு என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘ மத்திய அரசு எப்போது பார்த்தாலும் இது கொள்கை முடிவு. நாடாளுமன்றம் முடிவு செய்ய வேண்டியது. நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியது கிடையாது என்று தெரிவிக்கிறது. அரசு கொள்கைகளை வகுப்பது தொடர்பான பிரச்னைகளை முடிவு செய்வதில் நீதிமன்றமும் ஒரு ஆயுதம் தான்’’ என்றனர்.

முன்னதாக அரசியல்வாதிகள் அனைவரும் சொத்து விபரங்களை கட்டாயம் வெளியிட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவுக்கு அனைத்து கட்சியினரும் வரவேற்பு அளித்த நிலையில் மத்திய அரசு மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த வழக்கில் கடந்த வாரம் நடந்த விசாரணையின் போது எம்பி, எம்எல்ஏ.க்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்ப்பது குற்றமாகும். அதிக சொத்துக்கள் வாங்கி குவித்திருந்தால் மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

‘‘இவர்கள் அனைவரும் நல்ல அரசாங்கத்தின் எதிரிகள். அவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

26 லோக்சபா உறுப்பினர்கள், 11 ராஜ்யசபா உறுப்பினர்கள், 257 எம்எல்ஏ.க்கள் வருமானத்திறகு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.