பாட்னா

பீகார் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் சிராக் பாஸ்வான் மீது பாஜக எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் பிரசாந்த் கிஷோர் மீது குறை கூறி வருகிறது.

பீகார் மாநிலத்தில் இன்னும் சில தினங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக கூட்டணியின் முக்கிய கட்சியான லோக் ஜன் சக்தி தனியாகப் போட்டியிடுவது கூட்டணிக்குப் பின்னடைவை அளிக்கும் எனப் பலரும் கூறி வருகின்றனர்.   லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக எவ்வித அரசியல் நடவடிக்கையும் எடுக்காத பாஜக மீது ஐக்கிய ஜனதா தளம் வருத்தத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது..

சிராக் பாஸ்வானின் இந்த நடவடிக்கைகளுக்கு பாஜகவின் ஆசி உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் நம்புவதாக கூறப்படுகிறது.  சிராக் பாஸ்வான் தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததற்கு நன்றி கூறிய சிராக், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

பீகார் மாநில பாஜக தலைவர்கள் சிராக் பாஸ்வானைப் பற்றிக் குறை கூறாமல் பிரசாந்த் கிஷோர் அவருக்குத் தவறான ஆலோசனைகள் அளிப்பதாகக் கூறி வருகின்றனர்.  சிராக் பாஸ்வானின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் பிரசாந்த் கிஷோர் பின்னணி உள்ளதாக அவர்கள் கூறி வருகின்றனர்.  சுஷில் குமார் போன்ற பாஜக தலைவர்கள்  பிரசாந்த் கிஷோர் பீகாருக்கு வராமலே ரிமோட் மூலம் சிராக் பாஸ்வானை இயக்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், ”எனக்கும் பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.  அத்துடன் சிராக் பாஸ்வானை நான் இறுதியாக நிதிஷ்குமார் வீட்டில் அவர் முன்னிலையில் சந்தித்துள்ளேன்.

அவ்வாறு இருக்க என் மீது பழி போடுவது பாஜகவின் விளையாட்டுகளில் ஒன்றாகும்.  இது முதல்வர் நிதிஷ்குமாரை முட்டாளாக்க பாஜக செய்யும் திட்டமாகும்.   சிராக் உடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தியது அமித்ஷா மற்றும் ஜே பி நட்டா ஆகும்.  அவர்கள் இருவருடனும் பல்வேறு சந்திப்புக்களை நிகழ்த்திய பிறகே சிராக் இந்த முடிவை எடுத்துள்ளார்.

பாஜக தலைவர்கள் கூட்டணிக்கு எதிராக நடக்கும் சிராக்கை எதிர்த்து ஒரு டிவீட் அல்லது அறிக்கையை வெளியிடத் தவறி உள்ளனர்.  ஆனால் அவர்கள் என்னைக் குறை கூறுவது எனக்கு வியப்பாக உள்ளது.  சிராக் பாஸ்வான் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவருடன் சுஷில் மோடி பூபேந்திர யாதவ் போன்றோர் பின்னணியில் இருந்துள்ளனர்.

சிராக் பாஸ்வான் இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறவில்லை எனத் தோன்றுகிறது. பாஜக அவரை பயன்படுத்தி நிதிஷ்குமாருக்கு எதிரான வேட்பாளர்களைக் களம் இறக்கி வாக்காளர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தி உள்ளது.  இது நிதிஷ்குமாருக்கு ஒரு சேதத்தை உண்டாக்க பாஜக செய்யும் சதிகளில் ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.