டெல்லி:  லடாக் லே எல்லை பகுதி உள்பட  7 மாநிலங்களில் அமைக்கப்பட்ட 44 பாலங்களை இந்திய பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்து,  நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

லடாக், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் ராணுவப் போக்குவரத்து உள்பட பல்வேறு வசதிககளுக்காக  கட்டப்பட்டுள்ள 44 பாலங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாட்டுக்குஅர்ப்பணித்தார்.  திறக்கப்பட்ட 44 பாலங்களில் 8 பாலங்கள் லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளன.  இந்தப் பாலங்கள் மூலம் எல்லையில் ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருட்களை, தளவாடங்களை விரைவாகக் கொண்டு செல்ல இயலும். இந்த எட்டுப் பாலங்களும் எந்தப் பருவ காலத்திலும் இயங்கக்கூடிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் டாங்கிகள் உட்பட கனரக வாகனங்கள் செல்ல முடியும்.

இமாச்சலப் பிரதேசத்தில் தார்ச்சாவிலிருந்து லடாக்கை இணைக்கும் பாதை அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது. 290 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் சாலை முழுமையாக முடிந்துவிட்டால், லடாக் பகுதியிலிருந்து கார்கில் பகுதிக்கு எளிதாகச் செல்ல முடியும்.

இந்திய எல்லை சாலைகள் நிறுவனம் 6 மாத காலத்தில் இந்திய – சீன எல்லை ஓரத்தில் இந்தப் பாலங்களை அமைத்துள்ளது.

மேலும் 45 பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமானப் பணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிவடைந்து, இந்த பாலங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று சாலைகள் நிறுவனத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் சோதி கூறினார்.

 திறந்து வைக்கப்பட்ட 44 பாலங்கள் விவரம்:

ஜம்மு-காஷ்மீர் -10

லடாக் – 8

இமாச்சலப் பிரதேசம் -2.

பஞ்சாப் – 4.

உத்தரகாண்ட் – 8.

அருணாச்சலப் பிரதேசம்- 8.

சிக்கிம் – 4.